இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

April 30, 2008

கல்வியில் எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும்!

மாணவர்களுக்கு தற்போது விடுமுறைக் காலம். குறிப்பாக பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு படித்து முடித்துள்ள மாணவர்கள், மற்ற மாணவர்களைப் போல் இந்த கோடை விடுமுறையை நிம்மதியாக கழிக்க முடியாது. அதற்கு காரணம், வரவிருக்கும் தேர்வு முடிவுதான். எழுதிய தேர்வை மாற்றமுடியாது. எதிர்பார்த்தது கிடைக்கலாம். அல்லது ஏமாற்றமாகக்கூட முடியலாம்.


நீங்கள் நினைத்தால் உங்கள் எதிர்காலத்தை வளமானதாக மாற்றிக் கொள்ளலாம். அதற்கு இப்போதும் வாய்ப்புகள் இல்லாமல் இல்லை. பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்எடுக்க வேண்டும். அதில் தவறும் பட்சத்தில், அடுத்தடுத்த ஆண்டுகளில்மிகச்சிறப்பாக படித்து மதிப்பெண்களை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று நீங்களேஉறுதி கொள்ளுங்கள். இனி வரும் இரண்டு ஆண்டுகள்தான் உங்கள் வாழ்க்கையை நிர்ணயம் செய்யப் போகின்றன. எல்லா விஷயமும் எளிதாக நடக்க, வேலை கிடைக்க அதிக மதிப்பெண்கள் உங்களுக்கு உதவும்.

பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவு வாழ்க்கையின் திருப்பு முனைதான் இல்லை என்று சொல்வதற்கு இல்லை. ஆனால் மதிப்பெண் குறைவாக எடுத்ததால் நம்வாழ்க்கையில் தோல்வி அடைந்துவிட்டோமோ... இனி எந்த வாய்ப்பும் இல்லையோ என்ற கவலை மாணவர்களுக்கு எழக்கூடாது. அப்படி எழுந்துவிட்டால், நீங்கள் வாழ்க்கையில் எழ முடியாது.


இன்று வாழ்க்கையில் உயர்ந்த நிலையில் உள்ள அனைவரும் பனிரெண்டாம் வகுப்பில் 99 சதவீதம் எடுத்தவர்கள் என்று கூறிவிடமுடியாது. வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு கல்வி மிகவும் உதவியாக இருக்கும். அந்த கல்வியால் கிடைத்த அறிவை நீங்கள் பயன்படுத்தி முன்னேற வேண்டியது உங்கள் கைகளில் உள்ளது. மிக நன்றாக படித்தும் வேலைக்கு செல்ல முடியாமல் சிலர் இருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். பெற்ற கல்வியை பயன்படுத்தாமல் அவர்கள் இருக்கலாம். உங்களால் திறமையை வளர்த்துக் கொள்ள முடியும், ஏதாவது துறையில் இன்னொரு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் உங்கள் திறமையை மீட்டெடுக்க முடியும் என்று நீங்கள் நினைத்தீர்களேயானால், கல்லூரி வாழ்க்கைக்கு செல்ல விருக்கும் நீங்கள் அதற்கான இலக்கை இப்போதே நிர்ணயம் செய்யுங்கள். மூன்று அல்லது நான்கு ஆண்டு கல்லூரி படிப்பு சில மாதங்களைப் போல் ஓடிவிடும். அதுவரை நீங்கள் கொண்டிருக்கும் லட்சியத்துக்கு துளியளவும் பங்கம் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உங்கள் மனதில் எப்போதும் ஒளிர்ந்து கொண்டே இருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கையைப் பற்றி நீங்கள் முடிவு செய்யுங்கள். நான்கு பேரிடம் கலந்து ஆலோசியுங்கள். முடிவு எடுப்பதற்கு முன் எத்தனை பேரிடம் வேண்டுமானாலும் யோசனை கேட்கலாம். முடிவு எடுத்த பின், அதைப் பற்றி மீண்டும் யோசித்து குழம்புவதை இவையெல்லாம் தவிர்க்கும்.
புதிய வாழ்க்கைப் பயணத்துக்கு வாழ்த்துக்கள்!

No comments: