மேல்நிலை கல்வி பயின்ற மாணவர்கள், வேலைவாய்ப்பை தேர்வு செய்து கொள்வதற்காக, ஆன்-லைனிலும், வீடியோ-கான்பரன்சிங் முறையிலும் வழிகாட்டும் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்று தொழிலாளர் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்தார். தமிழக சட்டமன்றத்தில் தொழிலாளர், வேலைவாய்ப்பு துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் அன்பரசன் பேசியதாவது:-
தற்போது, பட்டமேல்படிப்பு, தொழிற்சார் கல்வி மற்றும் நிர்வாக தகுதிக்கான பட்டம் பெற்றவர்கள், பதிவு செய்யவும், அவர்களை வேலைகளுக்காக பரிந்துரை செய்யவும், மாநில அளவில் தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகம் சென்னையில் இயங்கி வருகிறது. தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுதாரர்களின் துயர் துடைக்கும் நோக்கில், தென் மாவட்டங்களில் உள்ள மனுதாரர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், மதுரையில் கிளை அலுவலகம் தொடங்கப்படும்.
உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான முக்கிய தகவல்கள் குறித்த தொழில் நெறிவழி காட்டுதல் நிகழ்ச்சி, ஆன்-லைன் (இன்டர்நெட்) மற்றும் தொலைக்காட்சி வழி கலந்தாய்வு (வீடியோ கான்பரன்சிங்) முறையில் நடைபெற ஏற்பாடு செய்யப்படும்.
2007-ல் பதிவு புதுப்பிக்காதவர்களுக்கு....
வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு பதிவு செய்ய வருவதில் ஏற்படும் போக்குவரத்து செலவு மற்றும் இதர செலவுகள் போன்ற சிரமங்களைக் குறைக்கும் நோக்கத்தில், மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில இடங்களில் பதிவுப்பணி மேற்கொள்ளப்படும். 2007-ம் ஆண்டில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவை புதுப்பிக்காதவர்களுக்கு, சிறப்புப் புதுப்பிப்பு சலுகை வழங்கப்படும். இதனால் சுமார் 40 ஆயிரம் மனுதாரர்கள் பயன்பெறுவார்கள்.
முடிதிருத்தும் தொழிலாளர்கள்
தொழிற்பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெற்றவர்களுக்கு உதவிட தற்போது வழிவகைகள் இல்லை. எனவே, முன்னோடி திட்டமாக, சென்னை மண்டல பயிற்சி இணை இயக்குனர் அலுவலகத்தில் பணியமர்த்தும் பிரிவு தொடங்கப்படும்.
தொழிற்பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெற்றவர்களுக்கு உதவிட தற்போது வழிவகைகள் இல்லை. எனவே, முன்னோடி திட்டமாக, சென்னை மண்டல பயிற்சி இணை இயக்குனர் அலுவலகத்தில் பணியமர்த்தும் பிரிவு தொடங்கப்படும்.
அரசினர் தொழிற்பயிற்சி நிலைய பயிற்றுனர்களுக்கு தற்போது நல்லாசிரியர் விருதுடன், ரூ.500 ரொக்கப்பரிசும், பாராட்டு பத்திரமும் வழங்கப்படுகிறது. இது ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும். கட்டுமான தொழிலாளர்கள் திறனை அதிகரிக்க, கட்டுமான கலைக்கழகம் ஒன்று நிறுவப்படும். பதிவு செய்யப்பட்ட உடலுழைப்பு தொழிலாளர்கள் 100 பேருக்கு நவீன அச்சுப்பயிற்சி அளிக்கப்படும். முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு நபருக்கு ரூ.4 ஆயிரம் வீதம் அழகுப்பயிற்சி அளிக்கப்படும். தையல் தொழிலாளர்களுக்கு பூத்தொழில் பயிற்சி அளிக்கப்படும்.
தொழிலாளர் குழந்தைகளுக்கு...
இளநிலை பட்டதாரி ஆசிரியர் பயிற்சிக் கல்வி, உடற்பயிற்சி பட்டப்படிப்பு ஆகியவற்றை கற்கும் தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய தொழிலாளர்களின் 25 குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ரூ.2,400-ம், ஆசிரியர் பயிற்சி பட்டய கல்வி கற்கும் 150 குழந்தைகளுக்கு வருடத்துக்கு ரூ.1,440-ம் கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும். இதற்கான செலவை வாரியம் ஏற்கும்.
முன்னாள் குழந்தைத் தொழிலாளர் 250 பேருக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.250 உதவித்தொகை வழங்கப்படும்.
சிறுதொழிற்சாலைகளுக்கு விருது
குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலும் அகற்ற, கண்காணிப்பு முறையினை செயல்படுத்துவதற்கு உணர்வூட்டல் மற்றும் திறன் மேம்பாடு பயிற்சி திட்டம் மேற்கொள்ளப்படும். விபத்துக்களை குறைப்பதற்கு ஊக்கப்படுத்தும் மாநில விருதுகள், இனி மற்ற ஆலைகளைப் போல் மிகச்சிறிய தொழிற்சாலைகளுக்கும் வழங்கப்படும்.
இ.எஸ்.ஐ. மருத்துவமனை
தொழிலாளர் அரசு ஈட்டுறுதி (இ.எஸ்.ஐ.) மருந்தகங்கள் கம்பம் நகராட்சி, முத்தல்லாபுரம், புதுக்கோட்டை (தூத்துக்குடி), சின்னமனூர், நாகர்கோவில் புறநகர், கன்னியாகுமரி மற்றும் உத்தமபாளையம் நகராட்சி பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படும். மேலும், சிவகாசி, ஓசூர் மற்றும் திருச்சியில் இ.எஸ்.ஐ. ஒப்புதலுடன் சித்த மருத்துவ பிரிவு தொடங்கப்படும். கோவை மற்றும் மதுரை இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளில் யோகா மருத்துவப்பிரிவு தொடங்கப்படும். ஸ்ரீபெரும்புதூர் தொழிலாளர் இ.எஸ்.ஐ. மருத்துவமனை, ஒரு மருத்துவர் வகையில் இருந்து 3 மருத்துவர் வகையாக உயர்த்தப்படும்.
தேயிலை தொழிலாளர்கள்
தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு தினக்கூலி ரூ.101.50 ஆக உயர்த்தி அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. 60 நாட்கள் வரை இது தொடர்பான கருத்துகள் பெறப்பட்டு, அதன் பின்னர் இறுதியாக ஆணை வெளியிடப்படும்.
இவ்வாறு அமைச்சர் தா.மோ. அன்பரசன் கூறினார்.
No comments:
Post a Comment