இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

April 21, 2008

புதுவை சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் மாபெரும் வெற்றி

புதுச்சேரி மாநிலத்தில், முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்படும் என அதன் அரசு அறிவித்துவிட்டுப் பின்னர் செயல்படுத்தாமல் இருப்பதைக் கண்டித்து, புதுச்சேரி சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நடத்தியது. தமுமுகவின் தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் முற்றுகைப் போராட்டத்திற்கு தலைமை தாங்கினார். துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ். ரிஃபாயி போராட்டப் பேரணியை ஒழுங்கமைத்தார்.
புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு உட்பட ஊர்களில் இருந்து கடல் கொந்தளித்த வெள்ளம் போல மக்கள் திரண்டு வந்தனர். பேருந்துகளிலும், வாகனங்களிலும் காரைக்கால் தமுமுகவினர் மக்களை அள்ளிக் கொண்டு வந்து புதுச்சேரி தலைநகரில் கொட்டினர். பேரணியில் திரண்ட மக்கள் ஐந்தாயிரத்திற்கும் கூடுதலாக இருந்தனர். பச்சிளம் குழந்தைகளை சுமந்து வந்த தாய்மார்கள், கால் கடுக்க 3.கி.மீக்கும் கூடுதலான தூரத்தை, பேரணியில் கடந்தனர். சுமார் 4.30 மணியளவில் புதுச்சேரி இரயில் நிலையத்திறகு எதிர்புறம் ஆண்களும், பெண்களும் சிறுவர்களும் சிறுமியர்களும் திரண்டனர். பேரணியின் துவக்கத்தில் பெண்கள் சென்றனர். அவர்களை தொடர்ந்து ஆண்களின் அணிவகுப்பு தமுமுக தலைவா பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்வை பின் தொடர்ந்து சென்றது.
புதுச்சேரி முதலமைச்சர் ரெங்கசாமியை கண்டித்து மக்கள் ஆக்ரோஷமான கோஷங்களை எழுப்பினர். ''ரங்கசாமி அண்ணாச்சி, இடஒதுக்கீடு என்னாச்சி'' என்று கேள்வி எழுப்பினர்.
பேரணி மிக்க கண்ணியமாகவும், அதே நேரம் கோரிக்கையை வலியுறுத்தும் வேகத்தையும், ஆவேசத்தையும் குறைத்து விடாமலும் முக்கிய சாலைகளை கடந்து சென்றது, 'பழைய பேருந்து நிலையம், அண்ணாசாலை, நேரு வீதி, மிஷன் வீதி வழியே பொது மருத்துவ மனையை அடைந்தது. சுமார் 1 மணி நேரத்திற்கும் கூடுதலாகவே பேரணி நகரத்தை கடந்து சென்றது. காவல்துறையினருக்கு எந்த சிரமமும் இருக்கவில்லை. இது தமுமுக நடத்தும் போராட்டம். பயப்படத் தேவையில்லை என்ற காவல்துறையினரின் உள் உணர்ச்சியை அவர்களது பதற்றமற்ற நடவடிக்கைகள் வெளிப்படுத்தின. பேரணியினருக்கு எந்த இடையூறும் தராமலும், மனதளவில் கூட காயங்களை ஏற்படுத்தா வண்ணமும் நட்பியல் முறையில் புதுச்சேரி காவல்துறை தமுமுகவின் உணர்வுப் பூர்வமான போராட்டத்திற்கு ஒத்துழைப்புத் தந்தது.
பேரணி புதுச்சேரி சட்டமன்றத்தின் சற்று முந்தி தொலைவில் காவல்துறையின் தடுப்பு அணைகளால் நிறுத்தப்பட்டது. அதுவே பேரணி முற்றுப்பெறும் எல்லையாக இலக்கு வைக்கப்பட்டிருந்தது.
பாண்டிச்சேரி வீதிகள் அத்தனையும் மிக அழகானவை. அதனால் பேரணியின் நெடிய தூரம் கடந்த வந்த ஆண்களும், பெண்களும் சாலையில் அமர தமுமுக தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் உணர்ச்சி மிக்க உரை ஒன்றை நிகழ்த்தினார். தொடர்ந்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. அடுத்த திட்டமிட்டபடி காவல்துறை போராட்டக்காரர்களை கைது செய்யத் தொடங்கியது. காவல்துறை வாகனங்களில் கைது செய்யப்பட்ட முஸ்லிம்கள் ஏற்றிச் செல்லப்பட்டனர். பின்னர் இந்த சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் சுமார் இரவு 8 மணி அளவில் முற்றுப்பெற்றது. இந்தப் போராட்டம் பாண்டிச்சேரியை ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் முதல்வர் ரெங்கசாமிக்கும் முஸ்லிம் தனி ஒதுக்கீடு பற்றி நினைவூட்டுவதோடு மட்டுமின்றி எச்சரிக்கும் செயலாகவே நடத்தப்பட்டது. தொடர்ந்து மௌனம் காக்கப்படுமானால் வேறுவிதமான நெருக்கடி போராட்டங்களை புதுச்சேரி சந்திக்கும் நாள் தொலைவில் இல்லை என்று எச்சரிக்கையும் இந்தப் பேரணி போராட்டம் விடுத்து வந்துள்ளது. புதுவை முஸ்லிம்களின் உரிமை குரலுக்கு வலுசேர்க்க சகோதர அமைப்பினர்கள் பலரும் ஆர்வத்துடன் வந்து வரவேற்றனர்.
பெரியார் தி.கவின் புதுவை மாநில தலைவர் லோகு ஐயப்பன், விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் அமுதவன், பாவணன், புஸ்ஸி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆனந்து மக்கள் குடிமையியல் உரிமை கழகத்தின் சுகுமாரன் ஆகியோர் வரவேற்று ஆதரவு தந்தனர்.
மாநிலச் செயலாளர் ஏ.எஸ்.எம். ஜுனைது, மாநில துணைச் செயலாளர் ஜெ. ஹாஜாகனி, மாநில உலமாக்கள் அணிச் செயலாளர் யூசுப் எஸ்.பி., காரைக்கால் மாவட்டத் தலைவர் லியாக்கத் அலி, பாண்டிச்சேரி மாவட்டப் பொறுப்பாளர் ஜலால் உள்ளிட்டோர் முன்னிலை வகித்த இந்தப் போராட்டம் பெரும் மக்கள் எழுச்சியோடு நடந்து முடிந்தது. இன்னும் சில நாட்கள்ல அல்லது சில வாரங்களில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் அடுத்த கட்டப் போராட்டத்தை அறிவிப்போம் என புதுவை தமுமுக கூறியுள்ளது.
பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியின் டி.ஆர். பட்டணம், நிரவி இன்னும் பல இடங்களில் இருந்தும் முஸ்லிம்களின் வங்கக்கடலென அலை நுரைத்து வந்தனர்.

No comments: