இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

July 10, 2007

தமிழர்கள் தவிப்பு – தமுமுக அரவணைப்பு

கடந்த புதன்கிழமை இரவு 8.00 மணிக்கு குவைத் மண்டல தமுமுக தலைவர் அ. அமானுல்லாஹ் அவர்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வர 'மீனா பஜார் என்னுமிடத்தில் 30 பேர் கொண்ட ஒரு கூட்டம் யாரோ ஒருவரை பிடித்து வைத்துகொண்டுள்ளது. ஒரே பிரச்சனையாக உள்ளது. உடனே வாருங்கள்' என்ற செய்தியோடு தொலைபேசி துண்டிக்கப் பட்டது. மீனா பஜார் என்ற பகுதி வியாபார ஸ்தலங்கள் மிகுந்த இடம். குவைத் சிட்டியின் மையப்பகுதி. அங்கு வந்து சேர்ந்த தமுமுக தலைவர், அங்குள்ள கூட்டத்தை கண்டு பிரமித்து என்ன ஏது என்று தீர விசாரித்து செய்திகளை உள்வாங்கி கொண்டார். அவர் சேகரித்த செய்திகளின் சாராம்சம் இதுதான்
"தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள போலி டிராவல்ஸ் ஏஜென்ட்டுகள் மூலம் இந்த 31 பேரும் குவைத்திற்கு வர முக்கிய காரணமானவர் சென்னையில் தங்கியிருக்கும் தஞ்சாவூரை சேர்ந்த அலாவுதீன் என்பவர். இந்த அலாவுதீன் குவைத்தில் உள்ளவர் தான். அவ்வப்போது சென்னை சென்று வருவார். குவைத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ரங்கநாதன் ரெட்டி என்பவருடன் தொடர்பு. இவரு(ரங்கநாதனு)க்கு இங்குள்ள சில நல்ல மனம் படைத்த அரபிகளுடன் தொடர்பு. இத்தொடர்பை தவறாக பயன்படுத்தி அந்த அரபிகளின் நிறுவனத்தில் உள்ள கைக்கூலிகளின் மூலமாக எலக்ட்ரீசியன், பிளம்பர், லேபர், ஹெல்பர், லைட், ஹெவி டிரைவர் என்று கூறி 50க்கும் மேற்பட்ட விசாக்களை பெற்று அலாவுதீன் என்பவரிடம் தந்துள்ளார். அலாவுதீன் வழக்கமாக அவருக்கு தெரிந்த போலி ஏஜென்டுகளிடம் விற்றுள்ளார். போலி ஏஜென்டுகளிடம் இந்த 31 நபர்களும் சிக்கியுள்ளனர். நபருக்கு 1 முதல் 1.5 லட்சங்கள் வரை பெற்று குவைத்திற்கு அனுப்பியுள்ளார்கள். இந்த முதல் குழு வரும்போதே சென்னையிலுள்ள லாட்ஜ்களில் பின்னாளில் வருவதற்காக 50க்கும் அதிகமானோர் தங்க வைக்கப்பட்டுள்ளதையும் பார்த்து வந்திருக்கிறார்கள்.
பல கட்டங்களாக குவைத் வந்த 31 பேரையும் ஹஸாவிய்யா என்னுமிடத்தில் இரண்டு அறைகளில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். 10, 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டும் ரங்கநாதன் என்பவர் மட்டும் வந்து உணவும் சிறிது தீனார்களும் தந்து விட்டு போவாராம். கம்பெனி எங்கே, வேலை எங்கே என்று 6 மாதங்களாக கேட்டு வந்துள்ளார்கள். இப்போ, அப்போ என சமாளித்து வந்துள்ளார்கள். இதற்கிடையில் குவைத் வந்து சேர்ந்த அலாவுதீனும் அவ்வப்போது சந்தித்து பர்மிட் –அக்காமா- ரெடியாக தாமதமாகும் சற்று பொறுங்கள் என்று சொல்லி விட்டு சென்றிருக்கிறார். நாளடைவில் இருவரும் (அலாவுதீன், ரங்கநாதன்) வருவதை தவிர்த்து விட்டனர். அங்கம்பக்கத்து ரூமில் உள்ளவர்கள் தான் உணவுக்கும், செலவுக்கும் உதவிசெய்து கொண்டு வந்துள்ளனர். இதில் கந்தகுமார் என்ற சகோதரர் குறிப்பிடத்தக்கவர். 6 மாதமாக பொறுத்திருந்து பார்த்தவர்கள் பிறகு பொங்கி எழுந்து குவைத் முழுவதும் இந்த இருவரையும் தேடி புறப்பட்டு விட்டார்கள். அப்படி தேடிவரும் பொழுதுதான் மீனா பஜார் என்ற இடத்திலுள்ள ஒரு உணவகத்தில் ரங்கநாதன் ரெட்டியை அடையாளம் கண்டு கொண்டவர்கள் பிடித்து வைத்துகொண்டு உடன் வந்த மற்றவர்களுக்கும் தகவல் தந்து விட்டு, நமது தமுமுக தலைவருக்கும் தகவல் தந்துள்ளனர்'.
இந்த பிரச்சனையை தூதரகம் தான் தீர்க்க முடியும் என்பதை உணர்ந்து கொண்ட தமுமுக தலைவர், தூரத்தில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த, சமீபத்தில் 12ஆம் விழா கொண்டாடிய இஸ்லாமிய அமைப்பின் தலைவரிடம் இது விஷயமாக ஆலோசனை கூற முடியுமா? உதவி செய்ய முடியுமா? என்பதை கேட்டு ஆளனுப்பிய போது 'இந்த விசயத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை' என்று ஒற்றை வாக்கியத்தில் நழுவிக்கொண்டார். அதன் செயலாளரை தொடர்பு கொண்ட போது, 'இதோ அதோ' என்று அன்றிரவு 11 மணி வரையிலும் வரவேயில்லை. யாரும் வரமாட்டார்கள் என்பதை தெரிந்து கொண்ட தமுமுக தலைவர் அ. அமானுல்லாஹ், மண்டல செயலாளர் அப்துர் ரவூப் ஆகியோர் உடனே குவைத் காவல்துறைக்கு போன் செய்தனர். ரங்கநாதன் என்பவரை காவலர்கள் வசம் ஒப்படைத்து விட்டு மும்பையை சேர்ந்த சகோ.ஆரீப் காஜி என்பவரின் துணையோடு இப்பிரச்சனையை தூதரகத்தில் பதிவு செய்துவிட்டது தமுமுக. பிறகு அவர்கள் அனைவரையும் (21 பேரையும்) தங்களது பாதுகாப்பில் தூதரகம் எடுத்துகொண்டது. இப்பிரச்சனையை விரைந்து முடிக்க சொல்லி தமுமுகவின் நெருக்குதலால் கம்பெனியின் உரிமையாளரான குவைத்தியை வரவைத்து லேபர்கோர்ட்டில் பேச்சுவார்த்தை நடத்தும் போது, 'இந்த விசா சம்பந்தமாக எனக்கு எதுவும் தெரியாது. தற்போது எனது கம்பெனியில் எந்த வேலையும் காலியில்லை என்னை ஏமாற்றி விட்டார்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு டிக்கட் மட்டும் எடுத்து தருகிறேன். என்னை மன்னித்து கொள்ளச்சொல்லுங்கள்' என்று அந்த குவைத்தி கேட்டுக்கொண்டார்.
உடனடியாக (பாதிக்கப்பட்ட 31 பேரில் 5 பேர் காவல்துறை சோதனையில் சிக்கி 15 தினங்களாக காவலர் வசம் உள்ளனர். அவர்களுக்கும் டிக்கட் கொடுத்தாகிவிட்டது. மற்றொரு 5 பேர் நாம் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்பதை வந்தவுடன் தெரிந்து கொண்டு தங்கள் வீட்டில் இருந்து டிக்கட் வரவைத்து கொண்டு திரும்பிச் சென்று விட்டார்கள்) மீதி இருக்கும் 21 பேருக்கு மட்டும் டிக்கட் எடுத்து 9ஆம்தேதி முதல் தவணையாக 13 பேர்களையும் 10ஆம்தேதி மீதி 8 பேர்களை சென்னை வரை அனுப்பிவைக்க ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது. அனைவருக்கும் உரிய முறையில் வேலையுடன் கூடிய விசாவை இறைவன் நாடினால் ஏற்பாடு செய்ய பாஸ்போர்ட் காப்பியை தமுமுக வாங்கி வைத்து கொண்டது. அவர்கள் வைத்திருந்த விசாவை பரிசோதனை செய்த பிறகு இது டூரிஸ்ட் விசாதானே தவிர பணி நியமன விசா அல்ல என்பது உறுதியானது.
இப்படி தமுமுக தலைவரோடு எல்லா இடங்களிலும் உடன் இருந்தவர்கள் சென்னையில் கடந்த மாதம் நடைபெற்ற 'உலகத்தமிழ் இஸ்லாமிய இலக்கிய மாநாட்டின் குவைத் பொறுப்பாளர்' கவிஞர் சம்சுத்தீன் அவர்களும், குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் பொதுச்செயலாளரும், 'கே-டிக் செய்தி மடல்' இலவச இஸ்லாமிய மாத இதழின் இணையாசிரியரு மான மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ அவர்களும், 'குவைத் தமிழ் டாட் காம்' இலவச மாத இதழின் ஆசிரியர் அப்துல்கனி, வடிவமைப்பாளர் லுக்மான் சித்திக், ஜி.சங்கர் ஆகியோர்களும், சமுதாய ஆர்வலர்களும் அவ்வப்போது ஆலோசனைகள் கூறிவந்தனர். அனைவருக்காகவும் எல்லாம் வல்ல இறைவனிடம் இருகரமேந்தி துஆச்செய்கின்றோம்.
"இறைவனையன்றி எவனையோ நம்பி, எதிர்காலக் கனவுகளோடு
ஆகாய கப்பலேறி வந்தவர்களுக்கு
நட்பையும், நாளைய நம்பிக்கையையும் கொடுத்து வழியனுப்பி வைத்தது
குவைத் தமுமுக"
களத்தொகுப்பு: பரங்கிப்பேட்டை 'அய்மான்' (மண்டல செயற்குழு உறுப்பினர்)

No comments: