இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

July 21, 2007

தமிழக அரசியல் இன்றைய கண்ணோட்டம்

தமிழக அரசியல் இன்றைய கண்ணோட்டம்:
அலைகள் மீது சவாரி - சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்.
அலைகள் எழும் - விழும். ஆனால் அதன் மீதும் சவாரி செய்வதில் கில்லாடிகள் தமிழக அரசியல்வாதிகள்!!!
நடக்குமோ, நடக்காதோ, தள்ளிப்போடப்படுமோ - தவிர்க்கப்படுமோ என்றெல்லாம் சந்தேகத் தொட்டிலில் ஊஞ்சலாடிய மதுரை மேற்குத் தொகுதி சட்ட மன்ற இடைத் தேர்தல் கடைசியில் நடந்தே முடிந்துவிட்டது.
கலைஞர் கூட 25,000 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெறுவோம் என்று எதிர்பார்த்திருக்க 31,000 வாக்கு வித்தியாசத்தில் ஏறக்குறைய 'ஜேக்பொட்டே' அடித்து விட்டார்கள் தி.மு.க.கூட்டணியினர்.
சென்ற தேர்தலில் 57,000 வாக்குகள் பெற்று தொகுதியையும் கைப்பற்றியிருந்த அ.தி.மு.க சுமார் 30,000 வாக்குகள் மட்டுமே பெற்று 27,000 வாக்குகளையும் தொகுதியையும் இழந்துள்ளது.
தி.மு.க. அரசு ஊழல் நிறைந்தது என்றும் அராஜக அரசியல் நடத்துகிறது என்றும் ஜெயலலிதா அம்மையார் நடத்திய அதிரடி அரசியல் தாக்குதல்கள் பொது மக்கள் மத்தியில் எடுபடாமல் போய் விட்டதும், வேறு எது பற்றிப் பேசினாலும் இந்த இரண்டைப் பற்றியும் பேச இவருக்கு அருகதை இல்லை என்று இவரது கடந்த கால அரசியலை கணக்குப்போட்ட பொது மக்களின் கணிப்பு ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.
அதே சமயம், திமுக, அதிமுக அணிகள் மாபெரும் கூட்டணிகள் அமைத்துப் போட்டியிட தனி நபராகக் களமிறங்கிய விஜயகாந்த் சென்ற தேர்தலில் பெற்றதை விட சுமார் நான்காயிரம் வாக்குகள் அதிகம் பெற்று தமிழகத்தில் தான் தான் மூன்றாவது சக்தி என்று மீண்டும் ஒரு முறை நிரூபித்து இருக்கிறார்.
ஆனால், உள்ளூராட்சித் தேர்தலில் இந்தத் தொகுதியில் இவர் பெற்ற வாக்குகளை விட இப்போது பெற்ற வாக்குகள் சுமார் 4,000 குறைவு என்பதை எண்ணும்போது மூன்றாம் சக்தி என்ற கூற்றை பலரும் ஏற்க மறுக்கிறார்கள்.
இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றவர் காங்கிரஸ் வேட்பாளர்தான் என்றாலும் இது திமுகவுக்கும்இ கலைஞருக்கும் கிடைத்த தனிப்பட்ட வெற்றி என்று சொன்னால் அது மிகையல்ல. அதிலும் குறிப்பாக பல்வேறு பழிச் சொற்களுக்கு இலக்கான கலைஞரின் மூத்த மகன் அழகிரிக்குக் கிடைத்த வெற்றி என்றால் அது சற்று அதிகப் பிரசங்கித்தனமாகத் தோன்றலாம். ஆனால் அதுதான் உண்மை.
வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ' அண்ணன் அழகிரி வந்த பிறகுதான் வெற்றி சான்றிதழைப் பெற்றுக் கொள்வேன் என்று அடம் பிடித்ததும், கலைஞரின் முன்னிலையில் தான் சத்தியப் பிரமாணம் எடுத்துக்கொள்வேன் என்று தன் கட்சியை விட திமுகவுக்கு தன்னுடைய விசுவாசத்தை பிரகடனப்படுத்தியதையும் உதாரணமாகக் குறிப்பிடலாம்.
திமுக எதிர்ப்பு வாக்குகளை அதிமுகவும், விஜயகாந்த் கட்சியும் பிரித்ததால்தான் திமுக வெற்றி பெற்றது என்கிற வாதம் முன் வைக்கப் படுகிறது ஆனால் இவை இரண்டுமே சேர்ந்து போட்டியிட்டிருந்தாலும் திமுக கூட்ட்ணி 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருக்கும் என்றுதான் வாக்கு எண்ணிக்கை நமக்குச் சுட்டிக் காட்டுகிறது.
மேலும் திமுக - அதிமுக எதிர்ப்பு வாக்குகள்தான் விஜயகாந்துக்குப் போகின்றன. ஒரு வேளை ஏதாவது கட்சியில் விஜயகாந்த் ஐக்கியமாகும் பட்சத்தில் இது காணாமல் போக வாய்ப்புண்டு.
உண்மையில் வை.கோதான் மூன்றாவது சக்தியாக வளர்ந்து கொண்டிருந்தார். அவர் அதிமுக ஜோதியில் ஐக்கியமானதும் அந்த இடத்துக்கு விஜயகாந்த் வந்துவிட்டார் என்று சொல்லலாம் வை.கோ போல இவரும் ஏதாவது கட்சியுடன் கூட்டு சேர்ந்தால் விஜயகாந்தும் இந்த இடத்தை இழக்க நேரிடலாம்.
திமுக போய் அதிமுகஇ அதிமுக போய் திமுக என்ற நிலை இனி வருங்காலங்களில் ஏற்படாது என்று அரசியல் அவதானிகள் ஆரூடம் கணிக்கிறார்கள். ஒரு மூன்றாவது சக்திதான் ஆட்சிக்கு வரும் என்றும் சேர்த்துச் சொல்கிறார்கள்.
2011ல் அந்த மூன்றாவது சக்தியாக பாட்டாளி மக்க்ள் கட்சி வரும் என்று அதன் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மார் தட்டுகிறார். ஆனால் அவரது கட்சிக்கு மாநிலத்தின் வட புலத்தில் உள்ள அபரிமிதமான செல்வாக்கு தென்புலத்தில் இல்லை. அது மட்டுமல்ல அதன் கோட்டையான விருத்தாசலம் தொகுதியையே சென்ற தேர்தலில் அது விஜயகாந்திடம் இழந்துள்ளது. மேலும் வன்னியர்களின் சாதிக் கட்சி என்கிற தோற்றப் பொலிவிலிருந்து மீண்டு வர டாக்டர் பெரிதும் பாடு பட வேண்டியதிருக்கும். தன் சாதியையும் அந்நியப்படுத்தி விடாது, அனைத்து மக்களையும் அரவணைத்துச் செல்வது டாக்டருக்கு கம்பிமேல் நடக்கும் கடின வித்தையாக இருக்கும்
வை.கோ - விஜயகாந்த் - இடது சாரிகள் சேர்ந்த ஒரு கூட்டணிக்கு இது சாத்தியமாகலாம். ஆனால் அது அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்கிற சமாச்சாரம். ஆனால் வேடிக்கை என்னவென்றால் சில அத்தைகளுக்கு மீசை முளைக்கவே செய்கிறது.
அடுத்த தேர்தலில் பா.ம.க - திமுக கூட்டணியில் அங்கம் வகிக்காது என்பதற்கான அறிகுறிகள் இப்போதே தென்படுகின்றன. அதற்கு வலு சேர்ப்பதுபோல் 2011 தேர்தலில் பா.ம.க. தனித்து ஆட்சி அமைக்கும் என்று டாக்டர் ராமதாஸ் வெளிப்படையாகவே பிரகடனப் படுத்தி விட்டார்.
அதுபோல வை.கோ அதிமுகவில் நீடிக்க மாட்டார் என்பது இப்போதைக்கு ஊகம். ஆனால் இது உண்மையாகாது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை.
உள்ளூராட்சி தேர்தலில் ஒப்புக் கொண்டதற்கும் குறைவான இடங்களை ஒதுக்கியது. ஒதுக்கிய இடங்களில் அதிமுக காரர்களையே போட்டியிட வைத்தது. இது பற்றிப் பேச வேட்பு மனுக்களை வாபஸ் வாங்கும் நேர எல்லை கடந்து அனுமதியளித்தது என்பவையெல்லாம் தமிழக அரசியலைப் பொறுத்தவரை சகித்துக் கொள்ளக் கூடிய அவமானம்தான். இதற்கெல்லாம் உணர்ச்சி வசப்பட்டால் பிறகு அரசியலே நடத்த முடியாது
ஆனால் ராஜ்ய சபாவில் ஓர் இடம் ஒதுக்காமல் போனது சகித்துக் கொள்ளக் கூடியதல்ல. ஆறு இடங்கள் காலியாகின்றன. நான்கு இடங்களில் திமுக எளிதாக வெற்றி பெற முடியும். அதில் ஒன்றைத் தன் மகள் கனிமொழிக்கும், இன்னொன்றை இளைஞர் அணித் தலைவர் திருச்சி சிவாவுக்கும் கலைஞர் ஒதுக்குகிறார். இருக்கும் இன்னும் இரண்டில் ஒன்று காங்கிரசுக்கும், மற்றொன்று வலதுசாரி கம்யூனிஸ்ட் கட்சிக்கும் போகின்றன.
மீதமுள்ள இரண்டு இடங்களில் ஒன்றில் அதிமுக நிச்சயம் வெற்றி பெற முடியும். இன்னொன்றை கைப்பற்ற இன்னும் சில வாக்குகள் மற்றவர்களிடமிருந்து தேவை. இதை வைத்து கலைஞர் ஓர் அரசியல் சித்து விளையாட்டு விளையாடி இருக்கக் கூடும் ஆனால் தன் மகள் கனிமொழி களத்தில் இருப்பதால் போட்டி என்று வந்தால்
பிரச்னைகளும் கூடவே சிக்கல்களும் வரக்கூடும் என்று கருதி அந்த ஓர் இடத்தை பெருந்தன்மையுடன் கலைஞர் அதிமுகவுக்கு விட்டுக் கொடுக்கிறார். ஜெ.அம்மையாரும் முதன் முறையாக கலைஞரை இதற்காகப் பாராட்டுகிறார்.
'போனஸாகக்' கிடைத்த இந்த இடத்தை நல்ல 'பார்லிமெண்டேரியனான' வை.கோவுக்கு விட்டுக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் கொடுக்கவில்லை. அப்படிக் கொடுத்தால் நா.ம. கூட்டணிக் கட்சிகளின் தலைவராகவும் வை.கோவை நியமிக்க வேண்டியது நேரிடலாம். இது அம்மையாருக்கு ஏற்புடையதல்ல என்பது பொதுவான கணிப்பு அதுமட்டுமல்ல, தனக்கு நிகராக யாரும் வளர்வதை அந்த அம்மையார் விரும்புவதில்லை என்பது இது காறும் நாம் கண்டு வந்துள்ள சரித்திரம். அடுத்தவர் தனக்கு நிகராக மேடைகளில் ஆசனம் போட்டு அமர்வதைக் கூட அந்த அம்மையார் அனுமதிப்பதில்லை என்பது யாவரும் அறிந்த உண்மை
வை.கோவை 'புரட்சிப்புயல்' என்கிறார்கள். ஆனால் 'புரட்சிப்புலி' என்பதுதான் பொருத்தமாக இருக்கும். புலி கூண்டுகுள்ளேயும் கூட உலாவும் சுபாவமுடையது. அடங்கி இருக்காது. எனவே அது தனது கட்டுத் தளைகளை அறுத்துக்கொண்டு ஒரு நாள் சீறிப்பாயும் என்கிற எதிர்பார்ப்பு இங்கே நிறைய இருக்கிறது. இது என்றோ நடந்திருக்கும். ஆனால் கட்சிக்குள் ஏற்பட்ட பின்னல்கள் - பிணக்குகள் - பிளவுகள் அவரை நிதானிக்க வைத்திருப்பதாகவும் சிலர் கணக்குப் போடுகிறார்கள்.
இந்த நிலையில்தான் நடிகர் சரத்குமார் இன்னும் இரண்டு மாதங்களில் தன்னுடைய புதிய அரசியல் கட்சி தோன்றும் என்று அறிவித்துள்ளார். ரஜினியைப் போலவே சந்தர்ப்பம் வந்த போது நழுவ விட்டு விட்டு வாலை விட்டு தும்பைப் பிடிப்பதையே இவரும் தொடர்கிறாரோ என்கிற சந்தேகம் ஆரம்பத்திலேயே எழுந்துள்ளது.
சமூக அமைப்பில் ஒற்றுமைக்கு மிகச் சிறந்த உதாரணம் நாடார் இன மக்கள். ஆனால் அமைப்பு ரீதியாக பல்வேறு பிளவுகளுக்கும் - பிரிவுகளுக்கும் சிறந்த இலக்கணமும் இவர்கள்தான். பெருந்தலைவர் காமராஜருக்குப் பிறகு அந்த சமூகத்தை வழி நடத்த POLITICAL HEAVY-WEIGHT எனப்படும் அரசியல் ஜாம்பவான்கள் யாரும் தோன்றவில்லை. குமரி அனந்தன் 'சின்னக்காமராஜர்' என்று சிறிது காலம் வலம் வந்தார். இடையில் இலக்குகள் தவறிப் பயணித்ததால் பாதை மாறிப் போய் தன் வழியில் தானே தடைக் கற்களை ஏற்படுத்திக்கொண்டார்.
நாடார் அமைப்புகளில் காணப்படும் பல்வேறு பிரிவுகள்தான் சரத்குமாரை களம் இறங்க தயங்க வைத்தன. அந்த நிலையில் இன்னும் மாற்றம் எதுவும் இல்லை. எனினும் துணிந்து களம் காண்கிறார். இதற்கு விஜயகாந்த் நாடார் இன மக்களை இலக்கு கொண்டு நெல்லையில் மாநாடு நடத்தியதும், ஆதித்தனார் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை கட்சியின் பொருளாள ராக்கியது மட்டுமல்ல நாடார் இன மக்களின் ஜீவாதார பிரச்னையான கள் இறக்கும் உரிமம் வேண்டும் என்றும் விஜயகாந்த் குரல் கொடுத்தது தான் சரத்குமாரை துயில் கலையச் செய்திருக்கிறது
நாடார் இனத்தைச் சேர்ந்த திமுகவின் தூத்துக்குடி பெரியசாமியும், அதிமுகவின் அனிதா ராதாகிருஷ்ணனும் சரத்தை நாடார் மக்களிடையே அரசியல் ரீதியாகத் தலை எடுக்க அனுமதிப்பார்களா என்பது எழும் கேள்வி.
இதற்கிடையில் கலைஞர் இறக்கியுள்ள துருப்புச் சீட்டுகள் சரத்குமாரின் உறக்கத்தை கெடுக்க வல்லவை. தூத்துக்குடி பெரியசாமியின் மகள் கீதா ஜீவன், மறைந்த ஆலடி அருணாவின் மகள் டாக்டர் பூங்கோதை ஆகியோரை மாநில அமைச்சர்களாகவும், காவல்துறை 'என்கவுண்டரில்' உயிரிழந்த வெங்கடேசப் பண்ணையாரின் துணைவி ராதிகா செல்வியை மத்திய உள்துறை இணை அமைச்சராகவும் நியமித்ததன் மூலம் நாடார் இன மக்களின் பெருத்த அன்பிற்கும் அபிமானத்துக்கும் கலைஞர் ஆளாகியுள்ளார்.
இவற்றை விட இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் கலைஞர் தன் மகள் கனிமொழியை மத்திய மேல் சபை உறுப்பினராக அறிவித்ததும் அதை வரவேற்று அறிக்கை வெளியிட்ட முதல் அமைப்பு ஒரு நாடார் இன அமைப்புதான் அவர்கள் கூற்றுப்படி கலைஞரின் இரண்டாவது துணைவியார் ராஜாத்தி அம்மாள் நாடார் இனத்தைச் சேர்ந்தவர். எனவே கனிமொழியும் நாடார் இனத்தவர் என்பது அவர்களது வாதம்.
இது போக, சரத்குமார் மதுரைப் பகுதியில் பிறந்தவர் என்றாலும் விருதுநகர்-சிவகாசி பகுதிகளைச் சேர்ந்த வணிக வைசிய நாடார்கள் சரத்தை தங்கள் தலைவராக ஏற்றுக் கொள்வார்களா என்பது சந்தேகம் என்று கூறப்படுகிறது. தெற்கிலுள்ள தக்ஷ்ணமாற நாடார் அமைப்புகளில் எந்த அமைப்பு அல்லது எத்தனை அமைப்புகள் சரத்தை ஏற்றுக் கொள்ளும் என்பதும் கண்டு அறிய வேண்டிய ஒன்று. அது காலத்தின் தீர்ப்பாகவும் இருக்கும். ஆக, சலசலப்புகளுக்குப் பஞ்சம் இருக்காது. ஆனால் சரக்குக்கு நிச்சயம் பஞ்சமிருக்கும்.
தமிழக அரசியலில் வருங்காலங்களில் பல சூடும் சுவையும் நிறைந்த திருப்பங்களை எதிர்பார்க்கலாம். Survival of the Fittest - தகுதி உள்ளவன் மட்டுமே தாக்குப்பிடிப்பான் - என்கிற இந்த ஆதிக்கப் போட்டியில் யார், யார் நிற்பார்கள், யார், யார் நிலைப்பார்கள், யார், யார் நினைவில் மட்டுமே இடம் பெறுவார்கள் என்பது கேள்வி ! பதில் ? - யாமறியோம் பராபரமே!!!

No comments: