இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

July 10, 2007

செய்வோம் பிரார்த்தனை..! நமக்காகவும், உலக மக்களுக்காகவும்..,

கீழ்வரும் துஆக்கள் அனைத்தும் பெருமானார் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த துஆக்கள். ஆதாரப்புர்வமான ஹதீஸ் புத்தகங்களிலிருந்து திரட்டப்பட்டது. கீழ்காணும் விதிமுறைகளின் படி துஆ கேட்க வேண்டும் எனவும் நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்துகிறார்கள். அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்தும், நபி(ஸல்)அவர்கள் மீது ஸலவாத்துக்கூறி பிரார்த்தனை செய்ய வேண்டும். தூய மனதோடும், பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடும், உறுதியோடும் பிரார்த்தனை செய்ய வேண்டும். பிரார்த்தனையில் அவசரப்படக்கூடாது. உள்ளச்சத்தோடு பிரார்த்திக்க வேண்டும். சந்தோஷ, கஷ்ட நேரத்திலும் பிரார்த்திக்க வேண்டும். அல்லாஹ்வைத் தவிர வேறு யாரிடமும் பிரார்த்திக்கக் கூடாது. துஆச் செய்யும் போது அளவுக்கு மேல் சிரமத்தை மேற்கொள்ளாமல் இருக்க வேண்டும். கிப்லாவை முன்னோக்க வேண்டும். பிரார்த்தனை செய்யும்போது கைகளை உயர்த்த வேண்டும். முடியுமாக இருந்தால் துஆச் செய்வதற்கு முன் ஒழுச் செய்து கொள்ள வேண்டும். ஒழுக்கத்துடன் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யவேண்டும். 'துஆ' ஒரு வணக்கம் என்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். முதலில் தனக்காக பிரார்த்தித்து பின்பு மற்றவர்களுக்காக பிரார்த்திக்க வேண்டும். அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் மற்றும் அவனுடைய உயர்ந்த பண்புகளைக் கொண்டு அல்லது தான் செய்த நல் அமல்களைக் கொண்டு அல்லாஹ்விடம் உதவி தேடவேண்டும்.
  • 'இறைவா! எங்களுக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் நற்பாக்கியங்களைத் தருவாயாக! மேலும் எங்களை நரக வேதனையிலிருந்து காத்தருள்வாயாக! இறைவா! நரகின் சோதனை, நரக வேதனை, கப்ரின் சோதனை, கப்ரின் வேதனை, செல்வத்தின் சோதனையின் தீயவிளைவு, வறுமையின் சோதனையின் தீயவிளைவு ஆகிய அனைத்திலிருந்தும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். இறைவா! மஸீஹத் தஜ்ஜாலுடைய சோதனையின் தீயவிளைவுகளை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
  • இறைவா! பனிக் கட்டி மற்றும் பனித்துளி நீரால் என் உள்ளத்தை கழுவி விடுவாயாக! வெண்மையான துணியை அழுக்கிலிருந்து தூய்மைப் படுத்துவதைப் போல் என் உள்ளத்தை பாவங்களிலிருந்து தூய்மைப்படுத்துவாயாக! கிழக்கிற்கும் மேற்கிற்கும் நீ ஏற்படுத்தியுள்ள தூரத்தைப் போல எனக்கும் என் பாவங்களுக்கும் மத்தியில் தூரத்தை ஏற்படுத்துவாயாக!
  • இறைவா! சோம்பல், பாவச்செயல், மற்றும் கடன் ஆகியவற்றிலிருந்து நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். யாஅல்லாஹ்! இயலாமை, சோம்பல், கோழைத்தனம், வயோதிகம், கஞ்சத்தனம், கப்ரின் வேதனை, வாழ்வு மற்றும் மரணத்தின் சோதனை ஆகியவைகளை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
  • யாஅல்லாஹ்! கஷ்டங்கள் ஆட்கொள்வதை விட்டும் விரும்பத்தகாதவை ஏற்படுவதை விட்டும் தீயமுடிவுகளை விட்டும் விரோதிகளின் கேளி, கிண்டல்களை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
  • யாஅல்லாஹ்! என்னுடைய மார்க்கத்தை எனக்கு சீர்படுத்து வாயாக! ஏனெனில் அதுதான் எனது அரண். எனது உலகை எனக்கு சீர்படுத்துவாயாக! ஏனெனில் அதுதான் நான் வாழுமிடம். எனது மறுமையை சீர்படுத்துவாயாக! ஏனெனில் அதுதான் நான் திரும்பிச் செல்லுமிடம். எனது வாழ்க்கையில் அதிக நன்மைகள் புரிவதற்கு வாய்ப்பளிப்பாயாக! அனைத்து தீமைகளை விட்டும் விடுபட்டதாக எனது மரணத்தை ஆக்குவாயாக!
  • யாஅல்லாஹ்! நேர்வழியையும் உனது அச்சத்தையும், பத்தினித் தனத்தையும், பிறரிடம் தேவையற்ற நிலையையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன். யாஅல்லாஹ்! என் உள்ளத்தில் உனது அச்சத்தை ஏற்படுத்துவாயாக! உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவாயாக! நீதான் அதனைத் தூய்மைப் படுத்துவோரில் மிகச்சிறந்தவன். நீயே அதன் பொறுப்பாளன். நீயே அதன் தலைவனுமாவாய்.
  • யாஅல்லாஹ்! பயனளிக்காத கல்வியைவிட்டும், உனக்கு பயப்படாத உள்ளத்தை விட்டும், நிறைவடையாத மனதை விட்டும், பதிலளிக்கப்படாத பிரார்த்தனையை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
  • யாஅல்லாஹ்! எனக்கு நேர்வழியைக் காட்டுவாயாக! அதில் உறுதியாக நிற்கச் செய்வாயாக! யாஅல்லாஹ்! நேர்வழியையும் அதில் உறுதியாக நிற்பதையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன்.
  • யாஅல்லாஹ்! உனது அருட்கொடைகள் என்னை விட்டு நீங்குவதை விட்டும் ஆரோக் கியத்தன்மை என்னிடத்தில் மாறுவதை விட்டும் உனது திடீர் தண்டனையை விட்டும் உனது அனைத்துக் கோபங்களை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
  • யாஅல்லாஹ்! நான் செய்தவைகளின் தீயவிளைவை விட்டும் நான் செய்யாதவற்றின் தீயவிளைவுகளை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். யாஅல்லாஹ்! எனக்கு செல்வத்தையும் சந்ததியையும் அதிகப்படுத்துவாயாக! மேலும் எனக்கு நீ கொடுத்தவற்றில் அபிவிருத்தி செய்வாயாக! வணக்கத்திற்குரியவன் மகத்தான, கணிவான அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. வணக்கத்திற்குரியவன் மேன்மைமிக்க, அர்ஷின் அதிபதியான அல்லாஹ் வைத் தவிர வேறுயாருமில்லை. வணக்கத்திற்குரியவன் வானங்கள், பூமி மற்றும் கண்ணியத்திற்குரிய அர்ஷின் அதிபதியான அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை.
  • யாஅல்லாஹ்! நான் உனது அருளையே ஆதரவு வைத்துள்ளேன். அதனை கண் மூடித்திறக்கும் அளவிற்குக் கூட நிறுத்தி எனது உள்ளத்தை ஏங்க வைத்து விடாதே!. மேலும் என்னுடைய அனைத்து காரியங்களையும் சீர்படுத்துவாயாக! வணக்கத் திற்குரியவன் உன்னைத் தவிர வேறு யாருமில்லை.
  • யாஅல்லாஹ்! நிச்சயமாக நான் உனது அடிமை. உனது அடிமை மற்றும் உனது அடிமைப் பெண்ணின் மகன். எனது நெற்றிப்பிடி உன் கையில் உள்ளது. அதனை உனது சட்டத்தின்படி நீ செயல்படுத்துகிறாய். எனக்கு நீதமான தீர்ப்பு வழங்குகிறாய். உனக்கு நீயே சூட்டிக்கொண்ட, உனது வேதத்தில் நீ இறக்கியருளிய, உனது படைப்பினங்களில் ஒருவருக்கு (நபிக்கு) நீ கற்றுக் கொடுத்த, உனது மறைவான ஞானத்தில் நீயே தேர்ந்தெடுத்துக் கொண்ட உன்னுடைய அனைத்துப் பெயர்களின் பொருட்டால் கேட்கிறேன்.
  • இறைவா! குர்ஆனை என் உள்ளத்தை பொலிவூட்டக் கூடியதாக, நெஞ்சின் ஒளியாக, கவலையை நீக்கக்கூடியதாக, துன்பத்தை போக்கக் கூடியதாக ஆக்குவாயாக!
  • யாஅல்லாஹ்! உள்ளங்களை திருப்பக் கூடியவனே! எங்கள் உள்ளங்களை உனது வழிபாட்டின் பக்கம் திருப்புவாயாக! உள்ளங்களை புரட்டுபவனே! என் உள்ளத்தை உன் மார்க்கத்தில் நிலைத்து நிற்கச் செய்வாயாக! யாஅல்லாஹ்! இவ்வுலகிலும் மறுவுலகிலும் உன்னிடம் நலவைக் கேட்கிறேன். யாஅல்லாஹ்! என்னுடைய அனைத்து காரியங்களின் முடிவுகளையும் சிறந்ததாக ஆக்குவாயாக! இவ்வுலகின் இழிவை விட்டும் மறுவுலகின் வேதனையை விட்டும் என்னை பாதுகாப்பாயாக!
  • யாஅல்லாஹ்! எனக்கு கிருபைசெய்வாயாக! எனக்கு பாதகமாக கிருபை செய்யா திருப்பாயாக! எனக்கு உதவி செய்வாயாக! எனக்கு பாதகமாக உதவி செய்யாதிருப்பாயாக! எனக்காக சூழ்ச்சி செய்வாயாக! எனக்கு பாதகமாக சூழ்ச்சி செய்யாதிருப்பாயாக! எனக்கு நேர்வழியை காட்டுவாயாக! நேர்வழியை எனக்கு எளிதாக்குவாயாக! எனக்கு அநீதி செய்பவருக்கு பாதகமாக எனக்கு உதவிசெய்வாயாக! உனக்கு நன்றி செலுத்துபவனாக, உன்னை நினைவு கூர்பவனாக, உன் மீது அதிக அச்சம் கொள்பவனாக, உனக்கு வழிப்படுபவனாக, கட்டுப்படுபவனாக, அடிபணிபவனாக, சரணடைபவனாக என்னை ஆக்குவாயாக!
  • இறைவா! எனது பாவமன்னிப்பை ஏற்றுக் கொள்வாயாக! எனது பாவங்களை போக்கிடுவாயாக! எனது பிரார்த்தனைக்கு பதிலளிப்பாயாக! எனது ஆதாரங்களை நிலைபெறச் செய்வாயாக! எனது உள்ளத்திற்கு நேர்வழி காட்டுவாயாக! எனது நாவை பலப்படுத்துவாயாக! எனது உள்ளத்தின் கசடுகளை அகற்றிடுவாயாக!
  • யாஅல்லாஹ்! உன்னுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கேட்ட அனைத்து நல்லவற்றையும் நான் உன்னிடம் கேட்கிறேன். மேலும் உன்னுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் பாதுகாவல் தேடிய அனைத்து தீமைகளை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். உதவி செய்பவனும் நீயே! வழிகாட்டுபவனும் நீயே! யாஅல்லாஹ் நீ விதித்தவற்றிலிருந்து விலகவோ, விதிக்காதவற்றை செய்ய சக்தி பெறவோ உன் துணையின்றி முடியாது.
  • யாஅல்லாஹ்! என்னுடைய செவியின் தீங்கை விட்டும் பார்வையின் தீங்கை விட்டும் நாவின் தீங்கைவிட்டும் உள்ளத்தின் தீங்கைவிட்டும் எண்ணத்தின் தீங்கைவிட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
  • யாஅல்லாஹ்! வெண்குஷ்டம், பைத்தியம், உடலுறுப்புகள் அழுகிவிடும் நோய் மற்றும் பிற தீயநோய்கள் ஆகிய அனைத்திலிருந் தும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். யாஅல்லாஹ்! வெறுக்கத்தக்க குணங்கள், தீயசெயல்கள், கெட்ட ஆசைகள் ஆகியவற்றை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
  • யாஅல்லாஹ்! நிச்சயமாக நீயே மன்னிப்பவன். கண்ணியத்திற்குரியவன். மன்னிப்பை விரும்புகின்றவன். எனவே என்னை மன்னித்தருள்வாயாக! யாஅல்லாஹ்! நான் நல்லறங்களை செய்ய, தீமைகளை விட்டுவிட, ஏழைகளை நேசிக்க அருள் புரியுமாறும், என்னை நீ மன்னித்து, கிருபை செய்யுமாறும், நீ ஏதேனும் ஒரு சமூகத்தினரை சோதிக்க நினைத்தால் அந்தச் சோதனைக் குள்ளாக்கப்படாதவனாக என் உயிரைக் கைப்பற்றி விடுமாறும் உன்னிடம் கேட்கிறேன். உனது நேசத்தையும் நீ நேசிப்போரின் நேசத்தையும் உனது நேசத்தின் பக்கம் அழைத்துச் செல்லும் செயல்களை நேசிப்பதையும் உன்னிடம் கேட்கிறேன்.
  • யாஅல்லாஹ்! நான் அறிந்திருக்கின்ற மற்றும் அறியாத அனைத்து நன்மைகளையும் இவ்வுலகிலும் மறுவுலகிலும் தருமாறு உன்னிடம் கேட்கிறேன். நான் அறிந்திருக்கின்ற மற்றும் அறியாத அனைத்து தீமைகளை விட்டும் இவ்லகிலும் மறுவுலகிலும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். யாஅல்லாஹ்! உன்டைய அடியாரும்; நபியுமாகிய முஹம்மது-ஸல்- அவர்கள் கேட்ட நல்லவைகள் அனைத்தையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன். உன்னுடைய அடியாரும் நபியுமாகிய (முஹம்மது-ஸல்) அவர்கள் பாதுகாவல் தேடிய தீமைகள் அனைத்தை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
  • யாஅல்லாஹ்! சொர்க்கத்தையும் அதன் பக்கம் நெருக்கி வைக்கும் சொல் மற்றும் செயலையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன். மேலும் நரகத்தை விட்டும் அதன் பக்கம் நெருக்கி வைக்கும் சொல் மற்றும் செயலை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். மேலும் நீ எனக்கு நிர்ணயித்துள்ள அனைத்து தீர்ப்புகளையும், ஏற்பாடுகளையும் எனக்கு நல்லதாக ஆக்கிவைக்குமாறும் உன்னிடம் வேண்டுகிறேன்.
    யாஅல்லாஹ்! நான் நிற்கும்போதும் உட்காரும் போதும் படுக்கும் போதும் இஸ்லாத்தைப் பேணி நடப்பவனாக என்னை நீ ஆக்குவாயாக! மேலும் என்னை விரோதி மற்றும் பொறாமைக்காரனின் பரிகாசத்திற்கு ஆட்படுத்தா திருப்பாயாக! யாஅல்லாஹ்! உன்னிடமுள்ள அனைத்து நல்ல பொக்கிஷங்களிலிருந்தும் எனக்கு தருமாரு நான் உன்னிடம் கேட்கிறேன். மேலும் உன்னிடமுள்ள அனைத்து தீய பொக்கிஷங்களிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
    யாஅல்லாஹ்! உனக்கு மாறுசெய்வதை விட்டும் எங்களை தடுக்கக் கூடிய உன்னைப் பற்றிய அச்சத்தையும் உன்னுடைய சொர்க்கத்தைப் பெற்றுத்தரும் வழிபாட்டையும் உலக சோதனைகளை எளிதாகக் கருதச் செய்யும் உறுதியையும் எங்களுக்குத் தருவாயாக! இறைவா! எங்களுடைய செவிப் புலன்களையும் பார்வைகளையும் உடல் சக்திகளையும் நீ எங்களை வாழவைக்கும் வரை குறையின்றி இயங்கச் செய்வாயாக! அதனை எங்கள் வாரிசுகளுக்கும் ஆக்குவாயாக! எங்களுக்கு அநீதம் செய்தவர்களைப் பழி வாங்குவாயாக! எங்கள் மீது விரோதம் கொண்டவர்களுக்கு பாதகமாக எங்களுக்கு நீ உதவிசெய்வாயாக! எங்களுடைய மார்க்கத்தில் எங்களுக்கு சோதனைகளை ஏற்படுத்தாமல் இருப்பாயாக! இவ்வுலகையே எங்கள் நோக்கமாவும் எங்கள் அறிவின் எல்லையாகவும் ஆக்காதிருப்பாயாக! எங்கள் மீது இரக்கம் காட்டாத ஒருவரை எங்கள் பொருப்பாளியாக ஆக்கா திருப்பாயாக!
.... பிரார்த்தனைகள் தொடரும்...,

No comments: