இந்திய இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்ட நூல்களை அரபு மொழியில் மொழி பெயர்க்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு அபுதாபியில் நடைபெற உள்ள அகில இந்திய புத்தகக் கண்காட்சியில், மொழிபெயர்ப்பு நூல்கள் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டில்லியில் உள்ள புல்வாடியில், அரபு நாட்டு பிரதிநிதிகளும், இந்திய பதிப்பீட்டாளர்களும் கூடி, இந்திய நூல்களை மொழி பெயர்ப்பது குறித்து விவாதித்தனர். மொழி பெயர்ப்பு நூல்களை கண்காட்சியாக வைக்க முடிவு செய்துள்ள குழுவும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டது. புத்தகக் கண் காட்சியின் இயக்குனர் ஜமா அல் கியூபைசி, தலைமை அதிகாரி அப்துல்லா கியூபைமி, புத்தக கண்காட்சியின் உதவி இயக்குனரான கிளவ்டியா கைசர் ஆகியோர், பின்னர் நிருபர்களடம் கூறியதாவது: கிட்டத்தட்ட ஐந்தாயிரம் இந்திய நூல்கள் அரபு மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு, பதிப்பிக்க திட்டம் கொண்டுவரப்படும். ரவீந்திரநாத் தாகூர் பற்றிய நூல்கள் அரபு மொழியில் ஏற்கனவே மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. தற்போது, இந்திய கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்ட நூல்களைத் தவிர, கிளாசிகல் மற்றும் சம காலத்திய இலக்கியங்களை மொழிபெயர்க்கும் வேலை நடந்து வருகிறது. புத்தக விற்பனை அதிகாரி கிஷோர் குமார் கூறியதாவது: இந்திய வெளியீட்டாளர் கழகமும், இந்திய பதிப்பாளர் சங்கமும் இணைந்து இவ் விலக்கியங்களை மொழிபெயர்த்து வெளியிட முயற்சி மேற்கொண்டு வருகின்றன. ஐக்கிய அரபு நாடுகளில் (யு.ஏ.இ.,) 12 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். இதனால், அங்கு மொழி பெயர்ப்பு நூல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு நூல்களை மொழிபெயர்த்து வெளியிடுவதால், இரு நாடுகளின் கலாசார உறவும் மேம்படும். டில்லி புத்தகக் கண்காட்சியிலும் இதற்கான விளம்பரம் செய்யப்பட்டு, ஸ்டால் போடப்பட்டு, இந்நூல்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment