இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

August 11, 2008

விமானப்படை பணி - சில தகவல்கள்

விமானப்படையில் ஏர்மென் பணி என்பது இன்று பல இளைஞர்களின் கனவாக இருப்பதை அறிவோம். இதற்காக பல தேர்வு முறைகள் நடத்தப்படுகின்றன. குறிப்பிட்ட பகுதிகளில் குறிப்பிட்ட காலங்களில் இவை நடத்தப்படுகின்றன. ஏர்மென் பணிவாய்ப்பு பற்றிய தகவல்கள் நாளிதழ்களிலும் எம்ப்ளாய்மெண்ட் நியூஸ் வார இதழிலும் வெளியிடப்படுகின்றன.
விளம்பரங்களில் குறிப்பிடப்படும் நாளில் தவறாது நேரில் சென்று கலந்து கொள்ள வேண்டும். இப்படிச் செல்லும் போது ஒரிஜினல் சான்றிதழ்களை தவறாது எடுத்துச் செல்ல வேண்டும். இவை பரிசீலிக்கப்படுகின்றன. அடுத்ததாக எழுத்துத் தேர்வு இடம் பெறுகிறது. குரூப் எக்ஸ் எனப்படும் டெக்னிகல் ஏர்மென் பணிக்கு ஆங்கிலம், இயற்பியல் மற்றும் கணிதப் பிரிவு களிலிருந்து கேள்விகள் இடம் பெறுகின்றன.
குரூப் ஒய் பிரிவு ஏர்மென் பணிப் பிரிவுக்கு பொது அறிவு, ஆங்கிலம் மற்றும் ரீசனிங் பகுதிகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன. குரூப் ஒய் மெடிக்கல் அசிஸ்டண்ட் பிரிவு ஏர்மென் பணிக்கு ஆங்கிலம், வேதியியல், உயிரியல் பகுதிகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன. இவை அப்ஜக்டிவ் கேள்விகளே. கல்வி பயிற்சியாளர் மற்றும் இசைப் பிரிவு ஏர்மென் பணிகளுக்கு அவர்களின் குறிப்பிட்ட பிரிவுத் திறனறியும் கேள்விகள் இடம் பெறுகின்றன.
எழுத்துத் தேர்வில் வெற்றி பெறுபவருக்கு பிசிகல் பிட்னஸ் டெஸ்ட் எனப்படும் உடற்தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். 6 முதல் 8 நிமிடங்களுக்குள் ஓடும் 1.6 கி.மீ. ஓட்டம் இதில் இடம் பெறுகிறது.
எழுத்துத் தேர்விலும் உடற்தகுதித் தேர்விலும் வெற்றி பெறுபவருக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படுகிறது. இதன் இறுதியில் பரிந்துரைக்கப்படுபவர்கள் மருத்துவத் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும். குரூப் எக்ஸ் பிரிவில் டெக்னிகல் ஏர்மென் பணிக்கு பிளஸ் 2வில் இயற்பியல், கணிதம் மற்றும் ஆங்கிலத்தை படித்திருப்பதுடன் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அல்லது மெக்கானிக்கல்/ எலக்ட்ரிகல்/ எலக்ட்ரானிக்ஸ்/ ஆட்டோமொபைல்/ கம்ப்யூட்டர் சயின்ஸ்/ இன்ஸ்ட்ருமெண்டேசன் டெக்னாலஜி/ ஐ.டி. போன்றவற்றில் ஒன்றில் டிப்ளமோ தகுதி பெற்றிருக்க வேண்டும். 17 முதல் 22 வயதுக்குள் இருக்க வேண்டும்.
இதன் எஜூகேஷனல் பிரிவுக்கு பி.ஏ./பி.காம்/பி.எஸ்சி. இவற்றில் ஒன்றில் குறைந்தது 50% மதிப்பெண்களுடன் பி.எட். தகுதியும் பெற்றிருக்க வேண்டும். அல்லது எம்.ஏ. ஆங்கிலம், எம்.எஸ்சி. கணிதம்/இயற்பியல்/கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது எம்.சி.ஏ. இவற்றில் ஒரு தகுதியுடன் பி.எட். தகுதி மற்றும் 2 ஆண்டு ஆசிரியர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இதில் முதல் பிரிவுக்கு 20 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். அடுத்த பிரிவுக்கு 20 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
குரூப் ஒய் மற்றும் குரூப் இசட் பிரிவுகளுக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் திறன் பெற்றிருக்க வேண்டும். ஒய் பிரிவுக்கு 17 முதல் 22 வயதுக்குள்ளும் இசட் பிரிவுக்கு 17 முதல் 35 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். பொதுவாக இந்தப் பணிகளுக்கு 152.5 செமீ. உயரம் இருக்க வேண்டும். உயரம் மற்றும் வயதுக்கேற்ற எடையைப் பெற்றிருக்க வேண்டும். மார்பளவு குறைந்தது 5 செ.மீ. விரிவடைவதாக இருக்க வேண்டும். சிறப்பான கண் பார்வையைப் பெற்றிருக்க வேண்டும்.
உங்களது விண்ணப்பத்தை பதிவு செய்யவும் முழு விபரங்களறியவும் பார்வையிட வேண்டிய இணைய முகவரி: http://indianairforce.nic.in

No comments: