மதுரா : உயர் ஜாதிக்காரர் வீட்டை தாண்டி சென்றதால், ஆறு வயது தலித் பெண், தீயில் தூக்கி வீசப்பட்டாள் இப்போது உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறாள். உ.பி. மாநிலம் மதுராவில் இந்த கொடூரம் நடந்தது. இந்த மாவட்டத்தில் உள்ள ஒருகிராமத்தில், உயர்ஜாதியை சேர்ந்த ஒருவரின் வீட்டை தாண்டி சென்று விட்டாள் ஆறு வயது தலித் சிறுமி. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வீட்டை சேர்ந்த18 வயது வாலிபன், அந்த சிறுமியை, எரியும் நெருப்பில் போட்டுவிட்டான். அலறித்துடித்த அந்த சிறுமியை, அவளின் பெற்றோர் மருத்துவமனைக்கு தூக்கிக்கொண்டு போய் சேர்த்தனர். அந்த சிறுமிக்கு , உடலில் 50 சதவீத தீக்காயம் உள்ளது. அதனால், அவர் பிழைப்பதற்கு சில சதவீதம் தான் நம்பிக்கை உள்ளது. டாக்டர்கள் சிகிச்சை அளித்து போராடிக் கொண்டிருக்கின்றனர். இந்த கொடுமையை செய்த வாலிபனை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவன் மீது, கொலை முயற்சி மற்றும் பெண் குழந்தை சித்ரவதை உட்பட கடும் குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் போடப்பட்டுள்ளன. இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில்," ஜாதிக்கொடுமை இன்னமும் கூட கிராமங்களில் உள்ளது. தலித் இனத்தவரை உயர் ஜாதியினர் கொடுமைப் படுத்துவதை தடுக்க சட்டம் உள்ளது. ஆனாலும் தொடர்ந்து தாக்குதல் நடந்து கொண்டிருக்கிறது. இந்த வாலிபருக்கு அளிக்கப்படும் தண்டனை, மற்றவர்களுக்கு பாடமாக இருக்க வேண்டும். அந்த வகையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன' என்று தெரிவித்தார். உ.பி., பீகார் போன்ற மாநிலங்களில், ஜாதிக்கொடுமை தலைவிரித்தாடுகிறது. அதனால் தான் அங்கு அடிக்கடி வன்முறைகள் நடக்கின்றன.
நன்றி: தினமலர்
No comments:
Post a Comment