இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

December 15, 2009

டிசம்பர் 6 கருப்புதினக் கண்டனகூட்டம்






குவைத் தமுமுக ஏற்பாடு செய்த டிசம்பர் 6 கருப்பு தினக் கண்டன கூட்டம் டிசம்பர் 11, வெள்ளிக் கிழமை மாலை நடந்தது. ஃபாஹில் மண்டல பொருளாளர், அறந்தாங்கி அப்துல் அஜீஸ் அவர்கள் திருக்குர்ஆன் ஓதினார். தமிழக இஸ்லாமிய மாணவர் பேரவையின் தலைவர் பெரம்பலூர் ரஹ்மத்துல்லாஹ் தலைமையில், தமுமுக சகோதரர்கள் முன்னிலையில், தமுமுக நிர்வாகக் குழு உறுப்பினர் காரைக்கால் ஷாஹுல் அவர்கள் தொகுத்து வழங்க, இஸ்லாமிய அழைப்பாளர் (அரக்கோணம்) மெளலவி. அன்ஸர் ஹுசைன் ஃபிர்தெளஸி அவர்களின் அரசியல் எழுச்சி சிந்தனையுடன் தொடங்கியது.அதன் பின் தமிழோசைப் பேச்சாளர் சகோ.இராவணன், இஸ்லாமிய வழிகாட்டி மையத்தின் பேராசிரியர். தாஜுதீன், தமுமுக குவைத் ரிஃக்கா கிளை செயலாளர். சிதம்பரம் சாதிக், தொழிலதிபர் புரவலர் எஸ்.கே.எஸ் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். மற்றும் சகோ.அபு தாஹிர் கவிதை வாசிக்க, சகோ.புதுகை முஜிபுர் ரஹ்மான் அவர்கள் ஒரு தீர்மானத்தையும் வாசித்தார்.
இன்றைய முஸ்லிம் சமுதாயப் பிரச்னைகளுக்கு எல்லாம் அடிப்படைக் காரணம் முஸ்லிம்கள் அரசு அதிகாரத்தில் தகுந்த பங்கு கொள்ளாமல் இருப்பதுதான். எனவே தமிழக முஸ்லிம் சமூகத்தின் பேரெழுச்சியான மனிதநேய மக்கள் கட்சியில் எல்லா இயக்க சகோதரர்களும் ஒன்று சேர வேண்டும். நிச்சயமாக இன்று உள்ள இயக்கத் தலைவர்கள் ஒன்று சேர மாட்டார்கள். ஏனென்றால் பிரித்தவர்களே அவர்கள் தானே. ஆனால் இயக்க உறுப்பினர்கள் அனைவரும் அரசியலில் மட்டுமாவது ம.ம.க எனப்படும் மனித நேய மக்கள் கட்சிக்கு ஆதரவு தர வேண்டும் என்று இந்த கூட்டம் தமிழக முஸ்லிம்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறது.
சகோ.திருச்சி ஃபஜ்லுர் ரஹ்மான் அவர்கள் நன்றி கூற கண்டனக் கூட்டம் நிறைவடைந்தது.
வஸ்ஸலாம்

December 09, 2009

வேதாந்தி சாமியார் சொல்கிறார்: நரசிம்மராவ் ஆசியோடு பாபர் மசூதியை இடித்தோம்

லக்னோ, டிச. 8-

பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட லிபரான் கமிஷன் 17 ஆண்டுகளுக்கு பிறகு தனது அறிக்கையை தாக்கல் செய்தது. அதில், வாஜ்பாய், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட 60 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

இதில் முன்னாள் பாரதீய ஜனதா எம்.பி.யும், ராம ஜென்மபூமி கமிட்டி உறுப்பினருமான ராம்விலாஸ் வேதாந்தி சாமியாரும் ஒருவர்.லிபரான் கமிஷன் அறிக்கையில் முன்கூட்டியே திட்டமிட்டு பாபர் மசூதியை இடித்தார்கள் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இதை பாரதீய ஜனதா தலைவர்கள் மறுத்து வருகின்றனர்.

ஆனால் வேதாந்தி சாமியார் மட்டும் திட்டமிட்டுதான் இடித்தோம் என்று ஒப்புதல் அளித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி நடக்கும் கரசேவையின்போது பாபர் மசூதியை இடித்து தள்ளவேண்டும் என்று முன்கூட்டியே முடிவு செய்து இருந்தோம். அப்போது பிரதமராக இருந்த நரசிம்மராவை 1992 நவம்பர் மாதம் 20-ந்தேதி நான் சந்தித்தேன்.

அப்போது அவர் கரசேவையின்போது என்ன செய்யப்போகிறீர்கள்? என்று என்னிடம் கேட்டார். அதற்கு நான் 6-ந்தேதி பாபர் மசூதியை இடித்து தள்ளுவோம் என்று கூறினேன்.

இடிக்க போகிறோம் என்று அவரிடம் சொல்லி விட்டுத்தான் இடித்தோம். எனவே அவருடைய ஆசீர்வாதத்தோடுதான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

6-ந்தேதி கரசேவகர்கள் பாபர் மசூதி பகுதிக்குள் நுழைந்து மசூதியில் “டூம்” மீது ஏறினார்கள். அப்போது சங்பரிவாரை சேர்ந்த சில தலைவர்கள் அவர்களை இறங்கி வரும்படி கேட்டனர். ஆனால் நான் அவர்களை மேலும் முன்னேறி செல்லுங்கள். இடித்து தள்ளுங்கள் என்று கூறினேன். அதன்படி இடிக்கப்பட்டது.

பாபர் மசூதியை இடித்து அதை தரைமட்டமாக்கி சமப்படுத்தும் வரை அதாவது 7-ந்தேதி இரவு வரை அங்கேதான் நான் இருந்தேன். மசூதியை இடிப்பதை முழுவதும் நான் மேற்பார்வையிட்டேன்.

இதை சொல்வதற்காக நான் கவலைப்படவில்லை. முடிந்தால் என்னை தூக்கில் போடுங்கள்.

இவ்வாறு வேதாந்தி சாமியார் கூறினார்.

December 06, 2009

பாபர் மசூதி இடிப்பு தினம்: இந்து முன்னணியினர் அர்ச்சனையால் பரபரப்பு

பாபர் மசூதி இடிக்கப்பட்ட டிசம்பர் 6ஐ முஸ்லீம்கள் கறுப்புத்தினமாக கடை பிடித்து வருகிறார்கள். மசூதி இடிக்கப்பட்ட இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க கோரியும் பாபர் மசூதி இடிக்கப்பட்டதில் தொடர்புடையதாக லிபரான், கமிஷன் குற்றம்சாட்டிய 68 பேரை உடனே கைது செய்ய கோரியும் டிசம்பர் 6ல் பேரணி, போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த ஆண்டும் இன்று 6-ந்தேதி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக திருச்சி மாவட்டம் சார்பில் பாலக்கரையில் ரவுண்டானாவில் இருந்து பேரணி புறப்பட்டு சிங்காரதோப்பு காமராஜர் வளைவு அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி காலை 8 மணி முதலே அங்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் குவியத் தொடங்கினர். அங்கு பாபர் மசூதியை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோஷம் எழுப்பினர். பாபர் மஸ்ஜித் நிலத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் அப்துல் ஹக்கிம் தலைமை தாங்கினார். மாநில தலைமை நிர்வாக குழு உறுப்பினர் அப்துல் சமது கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் பயஸ் அகமது, பொருளாளர் பெரோஸ்கான், துணைச் செயலாளர்கள் பெராகிம்ஷா, சாதிக் பாட்ஷா, ஹபிபுல்லா, மாணவரணி உமர்பாரூக் துணைச் செயலாளர் முகமது அபேர் மருத்துவரணி அப்துல்காதர் மற்றும் 1000-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் பங்கேற்றனர். மேலும் பெண்கள் குழந்தைகளுடன் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தையொட்டி துணை கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில் உதவி கமிஷனர்கள் காந்தி, பழனிச்சாமி, ஞானசேகர், ராஜசேகரன், இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், முருகேசன் மற்றும் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திருச்சியில் ஆழ்வார் தோப்பு பாலக்கரை சிங்கார தோப்பு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. அங்காங்கே கறுப்பு கொடிகளை பறக்க விட்டிருந்தனர்.

இதற்கிடையே திருச்சி மலைக்கோட்டை பிள்ளையார் கோவிலில் இந்து முன்னணியினர் அர்ச்சனை செய்ய வருவதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

இதனால் அங்கு அர்ச்சனை செய்யாமல் திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவிலில் இந்து முன்னணியினர் அர்ச்சனை ஆர்ப்பாட்டம் செய்தனர்.

முன்னதாக அசம்பாவிதங்கள் ஏற்படாதவாறு மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் 4000 போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். திருச்சி ஜங்சன் ரெயில் நிலையம், விமான நிலையம் ஸ்ரீரங்கம், திருவானைக்கோவில், சமயபுரம் கோவில், மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.