பாபர் மசூதி இடிக்கப்பட்ட டிசம்பர் 6ஐ முஸ்லீம்கள் கறுப்புத்தினமாக கடை பிடித்து வருகிறார்கள். மசூதி இடிக்கப்பட்ட இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க கோரியும் பாபர் மசூதி இடிக்கப்பட்டதில் தொடர்புடையதாக லிபரான், கமிஷன் குற்றம்சாட்டிய 68 பேரை உடனே கைது செய்ய கோரியும் டிசம்பர் 6ல் பேரணி, போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த ஆண்டும் இன்று 6-ந்தேதி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக திருச்சி மாவட்டம் சார்பில் பாலக்கரையில் ரவுண்டானாவில் இருந்து பேரணி புறப்பட்டு சிங்காரதோப்பு காமராஜர் வளைவு அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி காலை 8 மணி முதலே அங்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் குவியத் தொடங்கினர். அங்கு பாபர் மசூதியை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோஷம் எழுப்பினர். பாபர் மஸ்ஜித் நிலத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் அப்துல் ஹக்கிம் தலைமை தாங்கினார். மாநில தலைமை நிர்வாக குழு உறுப்பினர் அப்துல் சமது கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் பயஸ் அகமது, பொருளாளர் பெரோஸ்கான், துணைச் செயலாளர்கள் பெராகிம்ஷா, சாதிக் பாட்ஷா, ஹபிபுல்லா, மாணவரணி உமர்பாரூக் துணைச் செயலாளர் முகமது அபேர் மருத்துவரணி அப்துல்காதர் மற்றும் 1000-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் பங்கேற்றனர். மேலும் பெண்கள் குழந்தைகளுடன் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தையொட்டி துணை கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில் உதவி கமிஷனர்கள் காந்தி, பழனிச்சாமி, ஞானசேகர், ராஜசேகரன், இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், முருகேசன் மற்றும் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.
பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திருச்சியில் ஆழ்வார் தோப்பு பாலக்கரை சிங்கார தோப்பு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. அங்காங்கே கறுப்பு கொடிகளை பறக்க விட்டிருந்தனர்.
இதற்கிடையே திருச்சி மலைக்கோட்டை பிள்ளையார் கோவிலில் இந்து முன்னணியினர் அர்ச்சனை செய்ய வருவதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
இதனால் அங்கு அர்ச்சனை செய்யாமல் திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவிலில் இந்து முன்னணியினர் அர்ச்சனை ஆர்ப்பாட்டம் செய்தனர்.
முன்னதாக அசம்பாவிதங்கள் ஏற்படாதவாறு மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் 4000 போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். திருச்சி ஜங்சன் ரெயில் நிலையம், விமான நிலையம் ஸ்ரீரங்கம், திருவானைக்கோவில், சமயபுரம் கோவில், மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment