திருவாரூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் கே.எச்.நூர்தீன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் எம்.முஜிபுர்ரகுமான், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஏ.குத்புதீன், முகமதுஅன்சாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில துணைச் செயலாளர் ஜே.ஹாஜாகனி சிறப்புரை யாற்றினார்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழகத்தில் (திருவாரூர், கடலூர் மாவட்டம்) இருந்து குவைத்திற்கு வேலைக்காக சென்ற தமிழர்கள் கடும் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு பரிதவிக்கின்றனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் குவைத்தில் அமைந்துள்ள இந்திய தூதரகத்திற்குச் சென்று இது தொடர்பாக புகார் மனுக்கள் அளித்தும், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமலும், பாதிக்கப்பட்டவர்கள் மீது எவ்வித கவனமும் செலுத்தாமலும் இருக்கும் இந்திய தூதரகத்தை இந்நிர்வாகக்குழு வன்மையாக கண்டிக்கிறது.
மேலும் பிற நாட்டின் தூதரகம் அந்நாட்டு மக்கள் பாதிக்கப்படும் போது அவர்களை மீட்பதற்காகவும், அவர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காகவும், துரித முறையில் செயல்படுவது போல் நம் நாட்டின் தூதரகம் பாதிக்கப்பட்ட நம் நாட்டின் மக்களுக்காக நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. மேற்படி விஷயத்தில் தமிழர்களின் மீது மிகுந்த அக்கறை கொண்ட மாநில அரசும், மத்திய அரசும் தலையிட்டு பாதிக்கப்பட்ட தமிழர்கள் உடனே தாயகம் திரும்புவதற்கும், அவர்கள் உரிய நிவாரணம் பெறுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
குறிப்பு: மேற்குறிப்பிட்டுள்ள தீர்மானங்களை குவைத் தமுமுக வழி மொழிகிறது.