இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!
Showing posts with label தமிழர்கள் விஸா தூதரகம் அமெரிக்கா குவைத் தமுமுக. Show all posts
Showing posts with label தமிழர்கள் விஸா தூதரகம் அமெரிக்கா குவைத் தமுமுக. Show all posts

June 19, 2008

குவைத்தில் மட்டுமல்ல அமெரிக்காவிலும் கூட..!

கிரீன் கார்டு வாங்கித் தருவதாக வேலைக்கு அழைத்துச் செல்லப் பட்ட 100 தமிழர்கள் உட்பட 550 இந்தியர்கள், அமெரிக்காவில் தவித்து வருகின்றனர். ஒரு மாதமாக வாஷிங்டனில் உள்ள தூதரகம் முன்னபாக இவர்கள் உண்ணாவிரதம் இருந்த போதிலும், இவர்களை இந்திய தூதர் ரோனன் சென் கண்டுகொள்ளவில்லை என்று புகார் எழுந்துள்ளதால், இப்பிரச்னை, பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோரின் கவனத்துக்கு தற்போது கொண்டு செல்லப்பட்டுள்ளது. மும்பையைச் சேர்ந்த திவான் அசோசியேட்ஸ் என்ற ஒரு ஏஜென்சி, "எச் 2பி' விசா மூலம் அமெரிக்காவில் வேலை வாங்கித் தருவதாகவும், அங்கு நிரந்தரமாக குடியுரிமை பெறும் வகையில் கிரீன் கார்டு வாங்கித் தருவதாகவும் விளம்பரம் செய்திருந்தது. இதற்காக, ஒவ்வொருவரிடமும் ஐந்து முதல் எட்டு லட்ச ரூபாய் வரை வாங்கிக் கொண்டு அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றது. டெக்சாஸ் அருகே உள்ள, "சிக்னல் இன்டர்நேஷனல்' என்ற கப்பல் கட்டும் கம்பெனியில் பணியில் அமர்த்தப்பட்டனர். "எச் 2பி' விசா பெற்றிருப்பவர்கள் தற்காலிகமாக மட்டுமே அமெரிக்காவில் வேலை செய்ய முடியும். இந்த விசாவைக் கொண்டு கிரீன் கார்டு வாங்கித் தருவதாக கூறி பல லட்சம் வரை மோசடி செய்துள்ள விவகாரம் தெரியவந்தவுடன் தாங்கள் மோசம் போய்விட்டதாக தொழிலாளர்கள் போர்க்கொடி உயர்த்தினர். இந்த 550 பேரில் 100 பேர் வரை தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களில் பெரும்பாலானோர் புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் பெரும்பாலும் கேரளாவைச் சேர்ந்தவர்கள். இந்த மோசடி விவகாரம் தெரிந்தும் வேறுவழியில்லாமல் 100 பேர் இன்னும் அந்த கம்பெனியில் பணியில் உள்ளனர். இன்னும் 100 பேர், வேறு வேலைக்கு சென்றுவிட்டதாக தெரிகிறது. பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென போராட்டத்தில் குதித்தனர். இதற்காக, வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பாக தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். கடந்த மே 14ம் தேதியிலிருந்து ஜூன் 11ம் தேதி வரை இவர்கள் உண்ணாவிரதம் இருந்த போது, தினமும் காலையும் மாலையும் இந்திய தூதர் ரோனன் சென், காரில் இவர்களை கடந்து சென்றுள்ளார். ஆனால், என்ன ஏது என்று கேட்கவில்லை. தங்களது பிரச்னையை மனுவாக கொடுக்கப் போன போது, தனது புரோட்டகாலில் இது வராது என்று ரோனன் சென் மறுத்துவிட்டதாக தெரிகிறது. அந்நாட்டு பார்லிமென்ட்டான அமெரிக்கன் காங்கிரசைச் சேர்ந்த 18 எம்.பி.,க்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுப் பேசியுள்ளனர். இருப்பினும் எந்தவொரு பலனும் கிடைக்கவில்லை. தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி., கார்வேந்தன் மற்றும் கேரளாவைச் சேர்ந்த எம்.பி., செபஸ்டியன் பால் ஆகிய இருவரும், அமெரிக்கா சென்று இந்த தொழிலாளர்களை சந்தித்துப் பேசியுள்ளனர். இவர் களது பிரச்னை குறித்து ரோனன் சென்னை சந்தித்து விளக்கியுள்ளனர். இவர்களது பிரச்னையை உடனடியாக கவனிக்க வேண்டுமென்றும் இந்த விஷயம் குறித்து பார்லிமென்ட்டில் பிரச்னை கிளப்பப்படும் என்றும் தெரிவித்தனர். இதையடுத்து, ரோனன் சென் இந்த விஷயத்தில் நியாயம் இருப்பதாகவும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் எம்.பி.,க் களிடம் தெரிவித்தார். டில்லி திரும்பிய கார்வேந்தனும், செபஸ்டியன் பாலும், நிருபர்களிடம் நேற்று இதை தெரிவித்தனர். மோசடியில் ஈடுபட்ட திவான் அசோசியேட்ஸ் நிறுவனம் மீது மும்பை போலீசார் கிரிமினல் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும் என்றும், இது குறித்து அமெரிக்காவில் நடக்கும் வழக்கு விசாரணைக்கு பாதிக்கப் பட்ட தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் உரிய உதவிகளை இந்திய தூதரகம் செய்திட வேண்டும் என்றும் பிரதமரிடம் வலியுறுத்தப் படும் என தெரிவித்தனர். - தினமலர்.


குவைத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக இந்திய தூதரகமும் இதே நிலையில் தான் உள்ளது. வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் அந்நிய செலவாணி மட்டும் வேண்டும் அவர்களது பிரச்சனைகளில் அரசு தலையிடாதா. அமெரிக்காவில் பாதிக்கப்பட்டால் மட்டும் தான் பாராளுமன்றம் வரை போகுமா..? அமெரிக்காவில் பாதிக்கப்பட்டால் தான் பிரதமரிடம் வலியுறுத்தப்படுமா..? தமிழகத்தின் எல்லா செய்திதாள்களுக்கும், எல்லா தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் குவைத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக குரல் கொடுக்க சொல்லி செய்திகள் அனுப்பி இதுவரை தனியாவே போராடி வருகின்றோமே தவிர தூதரகத்தின் - அரசின் எந்த நடவடிக்கைகளும் வெளிவரவில்லை. இதை படிக்கும் அன்பர்கள் தங்களுக்கு தெரிந்த பத்திரிக்கைகளுக்கு அனுப்பி நிவாரணம் கிடைக்க ஆவணச்செய்யுமாறு குவைத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் சார்பாக குவைத் தமுமுக கேட்டுக்கொள்கின்றது.