இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

February 07, 2008

வீராங்கனை பில்கிஸ் பானு வழக்கு - அடையாளம் -3


பில்கிஸ்பானுவின் விடாப்பிடியான போராட்டத்தின் காரணமாகத்தான் இத்தீர்ப்பு கிடைத்திருக்கிறதேயொழிய, நீதிமன்ற முனைப்பின் காரணமாக இந்தச் சிறிய வெற்றி கிடைக்கவில்லை. இந்து மதவெறிக் கும்பல் இத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் சடலங்களை, தாக்குத‌ல் நடந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தி, பக்கத்தில் இருந்த காட்டுப்பகுதிக்குக் கொண்டு சென்று புதைத்துவிட்டது. பில்கிஸ்பானுவின் மகள் சலேஹாவின் சடலம் எங்கோ மாயமாய் மறைந்து போனது. இதனைக் காட்டி, இப்படிப்பட்ட சம்பவமே நடக்கவில்லை என இந்து மதவெறிக் கும்பல் வாதாடியது.

பில்கிஸ்பானுவின் உறவினர்களின் சடலங்களை இரண்டாம் முறை பிரேதப் பரிசோதனை செய்வதற்காக சி.பி.ஐ. தோண்டியெடுத்த பொழுது, அச்சடலங்கள் தலையற்ற முண்டங்களாக இருந்தன. சடலங்களை அடையாளம் கண்டு கொள்ளக் கூடாது என்பதற்காகவே, அவ்வுடல்களில் இருந்து தலைகள் "மர்மமான" முறையில் வெட்டி எடுத்துச் செல்லப்பட்டிருந்தன‌. சடலங்கள் விரைவாக அழுகிப் போய்த் தடயங்கள் மறைந்து போய்விடவேண்டும் என்பதற்காகவே, சடலங்களின் உடம்பு முழுவதும் உப்பு தடவப்பட்டிருந்தது.

தாக்குதல் தொடர்பான முக்கியமான சாட்சியங்கள் அனைத்தும் திட்டமிட்டு அழிக்கப்பட்டுவிட்ட நிலையில், பில்கிஸ்பானு மற்றும் அச்சம்பவத்தில் தனது தாயைப் பறி கொடுத்த மற்றொரு சிறுவனின் வாக்குமூல‌ங்கள்தான், இவ்வழக்கிற்கே உயிர்நாடியாக இருந்தன. பெஸ்ட் பேக்கரி வழக்கின் முக்கிய சாட்சியான ஷஹீரா ஷேக்கை மிரட்டிப்பணிய வைத்ததைப் போல, பில்கிஸ்பானுவையும் மிரட்டிப் பணியவைக்க முயன்றது, இந்து மதவெறிக் கும்பல். இதற்கொல்லாம் அஞ்சிவிடாத பில்கிஸ் பானு, கடந்த ஆறாண்டுகளாகத் தலைமறைவாக வாழ்ந்து கொண்டே, வழக்கையும் நடத்தி, குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை தர மறுத்துவிட்ட நீதிமன்றம், அதனை நியாயப்படுத, "அரிதிலும் அரிதான வழக்குகளில் மட்டுமே தூக்கு தண்டனை வழங்கமுடியும்; இக்குற்றவாளிகளுள் யார் யார் என்னென்ன குற்றங்களைச் செய்தார்கள் என்பது தெளிவாக நிரூபிக்கப்படவில்லை" என்று கூறியிருக்கிறது.

குஜராத்தில் இந்து மத வெறி பயங்கரவாதிகள் நடத்திய கலவரத்தில், ஏறத்தாழ 2,000 த்துக்கும் மேற்பட்ட அப்பாவி முசுலீம்கள், வக்கிரமான முறையில் தான் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர் என்பது வெட்ட வெளிச்சமான பிறகும், நீதிமன்றம் பில்கிஸ்பானு வழக்கை ஏதோ தனித்ததொரு சம்பவமாகப் பிரித்து பார்த்திருப்பதே நாணயக்கேடானது. மேலும், இந்து மதவெறியர்கள் ஒவ்வொரு கலவரத்திலும், "கும்மலாகச் சென்று முஸ்லீம்களைத் தாக்குவது; முஸ்லீம் பெண்ககைப் பாலியல் பலாத்காரப்படுத்துவது" என்பதை ஒரு உத்தியாகவே செயல்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், "இந்து மதவெறிக் கும்பல் எப்படிப்பட்ட குற்றச் செயல்களில் ஏடுபட்டாலும் அவர்களின் உயிரை நீதிமன்றம் பறித்து விடாது" என்று உத்தரவாதமளிப்பதாகவே, இத்தீர்ப்பு அமைந்துள்ளது.

குண்டு வைக்கும் முஸ்லீம் பயங்கரவாதிகளுக்கு சர்வ சாதாரணமாகத் தூக்கு தண்டனை அளிக்கும் இந்திய நீதித்துறை, கும்பல் வன்முறையில் ஈடுபடும் இந்து மதவெறி ப‌யங்கரவாதிகளுக்குத் தண்டனை அளிக்கும் போதோ, "நிதானமாக" நடந்து கொள்கிறது. இந்திய நீதிமன்றங்களிடம் கானப்படும் இந்தக் காவிப் பாசத்தை நிரூபிப்பதற்கு ஏராளமார தீர்ப்புகளை ஆதாரமாகக் காட்ட முடியும்.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு மருத்துவர்களும், ஐந்து போலீசு அதிகாரிகளும், "தங்களின் கடமையை முறையாகச் செய்யாமல், நடந்த குற்றத்தை மூடி மறைத்து, இந்து மதவெறி பயங்கரவாதிகளுக்கு உதவியிருக்கிறார்கள்" என நீதிமன்றமே ஒத்துக் கொண்ட பிறகும், "அவர்களுக்கு இச்சதிச் செயலில் பங்கில்லை" என்ற காரணத்தைக் "கண்டுபிடித்து" அவர்களை விடுதலை செய்திருக்கிறது. காவிமயமாகி வரும் இந்திய அதிகார வர்க்கத்திறிகு, இதைவிட இனிப்பான தீர்ப்பு வேறெதுவும் இருக்க முடியாது.

இவர்களின் விடுதலையை எதிர்த்து மோடி அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் எனக் கோரியிருக்கிறார் பில்கிஸ்பானு. இந்தக் கோரிக்கை மோடிக்கு மட்டுமல்ல, "மோடியை இந்து மதவெறியன் அல்ல" எனச் சப்பைக்கட்டு கட்டும் "சோ" போன்ற நயவஞ்சகப் பேர்வழிகளுக்கும் விடப்பட்டுள்ள சவால்.


நன்றி : புதிய‌ ஜ‌ன‌நாய‌க‌ம் பிப்ர‌வ‌ரி/2008

No comments: