இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

February 28, 2008

அரசியல் வெற்றிடத்தை நிரப்ப புதிய கட்சி

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில பொதுக்குழு கடந்த ஆகஸ்ட் 26, 2007 அன்று தஞ்சை மாவட்ட பாபநாசத்தில் கூடியபொழுது.., தேர்தலில் பங்கெடுத்து நேரடி அரசியல் வெற்றிடத்தை நிரப்புவது குறித்து முடிவெடுக்க தலைமை நிர்வாகக் குழுவுக்கு அதிகாரம் வழங்கியிருந்தது. தமிழகத்தில் தனி இடஒதுக்கீடு பெற்று சமுதாய மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியது. - அப்பாவி கோவை சிறைவாசிகளின் வழக்கை விரைந்து முடிக்க சட்டரீதியாக போராடி, அதில் வெற்றி கண்டு மனித உரிமைகளை காப்பாற்றியது - என இருபெரும் கடமைகளை நிறைவு செய்துள்ள நிலையில், சமுதாய மக்களின் பேராதரவும் பெருகியுள்ள சூழலில், தேர்தல் அரசியல் வெற்றிடத்தை நிரப்புதல் குறித்து ஆய்வு செய்ய கடந்த 22.02.08 அன்று தமுமுகவின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் காஞ்சி மாவட்டம் செங்கல்பட்டில் நடைபெற்றது. பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில் தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர்கள், மாநில துணைச்செயலாளர்கள், மாநில அணி செயலாளர்கள் கலந்து கொண்டனர். அதில் பல்வேறு கருத்துகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அதன் மீது விவாதங்கள் நடத்தப்பட்டன.
தமுமுகவை பெயர் மாற்றத்துடன் அரசியல் கட்சியாக மாற்றுவது,
தமுமுகவின் வழிகாட்டலில் புதிய அரசியல் கட்சியை உருவாக்குவது,
என இரு தலைப்பில் சாதக-பாதகங்கள் அலசி ஆராயப்பட்டன. இறுதியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் இப்போது இருப்பது போன்ற எழுச்சியுடன் சமுதாய மற்றும் மார்க்கப் பணிகளை மேற்கொண்டு சமுதாய இயக்கமாக தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது. முஸ்லிம்களின் தேர்தல் அரசியல் வெற்றிடத்தை நிரப்பும் வகையில் புதிய அரசியல் கட்சியை உருவாக்கி தமுமுகவின் வழிநடத்தலில் அரசியல் பணி ஆற்றுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
புதிய அரசியல் கட்சி என்பது முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட இந்து மக்கள் ஆகியோர் இணைந்து பணியாற்றும் வகையில் முழுமையான ஜனநாயக கட்சியாக செயல்பட வேண்டும் என்றும், அதன் முக்கிய பொறுப்புகளில் அரசியலில் காலம்காலமாக வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்ற கருத்துக் களும் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து கூடுதலாக ஆய்வு செய்யவும், தமுமுகவுக்கும், புதிய அரசியல் கட்சிக்குமான உறவுகளை திட்டமிடுவதற்கும், அமைப்பு நிர்ணய சட்டத்தை உருவாக்குவதற்கும், குறிக்கோள்களை வடிவமைப்பதற்கும் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தலைமையில் அரசியல் ஆய்வுக்குழு அமைக்கப் பட்டுள்ளது. இக்குழுவில்.
பி. அப்துஸ் ஸமது (மாநிலச் செயலாளர்), மௌலா. நாசர் (மாநிலச் செயலாளர்), பேரா. ஹாஜாகனி (மாநில துணைச் செயலாளர்), ஜெ. அவுலியா (மாநில தொழிலாளர் அணி செயலாளர்) அகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த ஐவர் குழு மார்ச் 31, 2008-தேதிக்குள் தனது அறிக்கைகளை சமர்ப்பிக்கும். அந்த அறிக்கைகள் குறித்து தலைமை நிர்வாகக்குழு இறுதி முடிவெடுக்கும்.
புதிய அரசியல் கட்சி குறித்து கருத்துக்களை தெரிவிக்க விரும்புபவர்கள் தங்கள் ஆலோசனைகளை எழுத்துமூலம் கீழ்க்கண்ட முகவரிக்கு மார்ச் மாதம் 20-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம். வெளிநாடுகளில் உள்ளவர்கள் tmmk@tmmk.in என்ற மின்னஞ்சல் வழியாக கருத்துகளை அனுப்பலாம்.
கட்சிக்கான பெயர்
கொடி வண்ணம் (வரைந்து அனுப்புக)
கொள்கைகள் மற்றும் விதிகள்
தமுமுகவுக்கும், புதிய அரசியல் கட்சிக்குமான உறவு
வேட்பாளர் தேர்வு முறைகள்
கட்சிக்கான தனித்தன்மைகள்

நிர்வாகப் பொறுப்புகளை நிரப்புவது-ஆகியன குறித்து மட்டும் தங்கள் ஆலோசனைகளை புரியும் வகையில், தெளிவான எழுத்துகளில் எழுதி அனுப்ப வேண்டும். தமுமுக சகோதரர்களாக இருந்தால் அவர்கள் தங்கள் பொறுப்புகளை குறிப்பிட வேண்டுகிறோம். மற்றவர்கள் தங்கள் முகவரியோடு ஆலோசனைக் கடிதங்களை அனுப்ப வேண்டுகிறோம்.
இவண்
தலைமை நிர்வாகக் குழு
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
முகவரி:
அரசியல் ஆய்வுக்குழு,
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்,
7, வடமரைக்காயர் தெரு,
சென்னை - 600 001

February 14, 2008

சிமி அமைப்புக்கு மீண்டும் தடை:

மத்திய அரசின் இரட்டை நிலைப்பாட்டுக்கு கண்டனம்
இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்புக்கு தடை நீட்டிக்கப்பட்டதற்கு அகில இந்திய முஸ்லிம் மஜ்லிஸ் முஷாவராத்தின் தலைவர் டாக்டர் ஜஃபருல் இஸ்லாம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரவையின் கூட்டம் இம்மாதம் 7ஆம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிமி உள்பட பல அமைப்புகளின் செயல் பாடுகளுக்கு தடை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப் பட்டது. இந்தத் தடை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசால் தடை செய்யப்பட்ட பல்வேறு அமைப்புகளுக்கு தடை நீட்டிக்கப்பட்ட போதும் சிமி அமைப்புக்கான தடை குறித்து மட்டுமே விமர் சனங்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2001 ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சி செய்த பாரதீய ஜனதா அரசு சிமி அமைப்பை தடை செய்தது. சிமி தடை செய்யப்பட்ட நேரத்தில் அதன் தலைவர் மற்றும் அதன் முக்கிய உறுப்பினர்கள் போதுமான ஆதாரம் ஏதும் இல்லாமையால் விடுவிக்கப் பட்டனர் என்றும் முஷாவராத்தின் தலைவர் ஜஃபருல் இஸ்லாம் குறிப்பிடுகிறார்.

சங்பரிவார் பிரிவினைவாத மதவாத அமைப்புகள் நாட்டு மக்களின் ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கின்றனர். குஜராத், ஒரிஸா மற்றும் மகாராஷ்ட்ராவில் வெறிச்செயலை விளைவித்து வரும் இத்தகைய அமைப்புகளின் மீது தடையோ நடவடிக்கையோ எடுக்கப்படுவதில்லை. இது மத்திய அரசின் இரட்டை நிலைப்பாட்டுக்கு சரியான சான்றாகும்.

பயங்கரவாதத்திற்கு எதிரான எந்த நடவடிக்கையும் யாரும் எதிர்க்க மாட்டார்கள். ஆனால் எந்த ஆதாரமும் இன்றி அப்பாவி இளைஞர்களை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துவதையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஜஃபருல் இஸ்லாம் தெரிவித்தார். சிமி அமைப்பு எந்தவித பயங்கரவாத செயல் களிலும் ஈடுபட்டதாக எந்த ஆதாரமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

சிமி என்று சுருக்கமாக அழைக்கப்படும் (Students Islamic Movements of India) இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பு 2001ல் பாஜக அரசால் தடை செய்யப்பட்டது. அதே பாஜக அரசு 2003 ஆம் ஆண்டு சிமி மீதான தடையை நீட்டித்தது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2004ல் ஆட்சியைப் பிடித்தது. 2005ஆம் ஆண்டு சிமிக்கு தடையை நீட்டித்தது. தற்போது 2008ஆம் ஆண்டு சிமி மீதான தடையை மீண்டும் நீட்டித்துள்ளது. இந்தத் தடை இரண்டாண்டுகள் நீடிக்குமாம். பாஜக இரண்டு தடவை சிமியை தடை செய்துள்ளது. காங்கிரஸ் அரசும் இரண்டு தடவை சிமியை தடை செய்துள்ளது.
ஆஹா என்ன ஒற்றுமை!

இனிய உதயம் - தமிழர் ஐக்கியப் பேரவை-குவைத்


February 13, 2008

ஷஹீத் பழனிபாபா ஓர் சரித்திரப்பார்வை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்..,
குவைத்தில் கடந்த 01-02-2008 அன்று மிர்காப் பகுதியில் மாவீரன் திப்பு சுல்தான் அரங்கத்தில் (தஞ்சை உணவகம்) இரவு 8-00மணிக்கு தமிழக இஸ்லாமிய மாணவர் பேரவை ஏற்பாடு செய்த "ஷஹீத் பழனிபாபா ஓர் சரித்திரப்பார்வை" என்ற நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு குவைத்தின் முக்கிய பிரமுகர்கள் பெருந்திரளாக வருகை தந்திருந்தனர். வந்திருந்தவர்களை பெரம்பலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் ஒன்றிய செயலாளர் சகோ. முஹம்மது இக்பால் அவர்கள் வரவேற்று அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முன்னிலை வாத்தியார் என்றழைக்கப்படும் சகோ. அப்துல் லத்தீப் அவர்களும், தலைமை இப்பேரவையின் தலைவர் கா. ரஹ்மத்துல்லாஹ் அவர்களும் ஏற்றனர். கம்யூனிஸ தோழர். ஆர்.கே. சரவணன் அவர்கள் புரட்சிக்கவிதை ஒன்று வாசிக்க நிகழ்ச்சி இனிதே துவங்கியது. பல்வேறு பட்ட அமைப்பினரும், சிந்தனையாளர்களின் சிறப்புரைகளோடு "இந்த அரசாங்கம் என்னை தண்டிக்கட்டும், நாளைய வரலாறு என்னை விடுதலை செய்யும்" என்ற புரட்சியாளன் பிடல்கேஸ்ட்ரோவின் வைரவரிகளோடு துவங்கிய நன்றியுரையும் அதைத் தொடர்ந்த பழனிபாபா அவர்கள் பல்வேறு தலைப்பில் ஆற்றிய உரைகளின் வீடியோ தொகுப்புகளும் ஒளிபரப்பப்பட்டது. இரவு புரட்சிகர சமபந்தி விருந்தோடு விழா இனிதே நிறைவடைந்தது. இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக இஸ்லாமிய மாணவர் பேரவையின் செயற்குழு உறுப்பினர்கள் அப்துல் ரஹ்மான், முஹம்மது அலி, பரக்கத்துல்லாஹ், பிர்தவ்ஸ் பாஷா, அமானுல்லாஹ், நாஞ்சில் சுரேஷ், அன்வர் அலி, முஹம்மது அலி ஜின்னா மற்றும் பலர் இணைந்து செய்திருந்தனர்.

February 07, 2008

வீராங்கனை பில்கிஸ் பானு வழக்கு - அடையாளம் -3


பில்கிஸ்பானுவின் விடாப்பிடியான போராட்டத்தின் காரணமாகத்தான் இத்தீர்ப்பு கிடைத்திருக்கிறதேயொழிய, நீதிமன்ற முனைப்பின் காரணமாக இந்தச் சிறிய வெற்றி கிடைக்கவில்லை. இந்து மதவெறிக் கும்பல் இத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் சடலங்களை, தாக்குத‌ல் நடந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தி, பக்கத்தில் இருந்த காட்டுப்பகுதிக்குக் கொண்டு சென்று புதைத்துவிட்டது. பில்கிஸ்பானுவின் மகள் சலேஹாவின் சடலம் எங்கோ மாயமாய் மறைந்து போனது. இதனைக் காட்டி, இப்படிப்பட்ட சம்பவமே நடக்கவில்லை என இந்து மதவெறிக் கும்பல் வாதாடியது.

பில்கிஸ்பானுவின் உறவினர்களின் சடலங்களை இரண்டாம் முறை பிரேதப் பரிசோதனை செய்வதற்காக சி.பி.ஐ. தோண்டியெடுத்த பொழுது, அச்சடலங்கள் தலையற்ற முண்டங்களாக இருந்தன. சடலங்களை அடையாளம் கண்டு கொள்ளக் கூடாது என்பதற்காகவே, அவ்வுடல்களில் இருந்து தலைகள் "மர்மமான" முறையில் வெட்டி எடுத்துச் செல்லப்பட்டிருந்தன‌. சடலங்கள் விரைவாக அழுகிப் போய்த் தடயங்கள் மறைந்து போய்விடவேண்டும் என்பதற்காகவே, சடலங்களின் உடம்பு முழுவதும் உப்பு தடவப்பட்டிருந்தது.

தாக்குதல் தொடர்பான முக்கியமான சாட்சியங்கள் அனைத்தும் திட்டமிட்டு அழிக்கப்பட்டுவிட்ட நிலையில், பில்கிஸ்பானு மற்றும் அச்சம்பவத்தில் தனது தாயைப் பறி கொடுத்த மற்றொரு சிறுவனின் வாக்குமூல‌ங்கள்தான், இவ்வழக்கிற்கே உயிர்நாடியாக இருந்தன. பெஸ்ட் பேக்கரி வழக்கின் முக்கிய சாட்சியான ஷஹீரா ஷேக்கை மிரட்டிப்பணிய வைத்ததைப் போல, பில்கிஸ்பானுவையும் மிரட்டிப் பணியவைக்க முயன்றது, இந்து மதவெறிக் கும்பல். இதற்கொல்லாம் அஞ்சிவிடாத பில்கிஸ் பானு, கடந்த ஆறாண்டுகளாகத் தலைமறைவாக வாழ்ந்து கொண்டே, வழக்கையும் நடத்தி, குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை தர மறுத்துவிட்ட நீதிமன்றம், அதனை நியாயப்படுத, "அரிதிலும் அரிதான வழக்குகளில் மட்டுமே தூக்கு தண்டனை வழங்கமுடியும்; இக்குற்றவாளிகளுள் யார் யார் என்னென்ன குற்றங்களைச் செய்தார்கள் என்பது தெளிவாக நிரூபிக்கப்படவில்லை" என்று கூறியிருக்கிறது.

குஜராத்தில் இந்து மத வெறி பயங்கரவாதிகள் நடத்திய கலவரத்தில், ஏறத்தாழ 2,000 த்துக்கும் மேற்பட்ட அப்பாவி முசுலீம்கள், வக்கிரமான முறையில் தான் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர் என்பது வெட்ட வெளிச்சமான பிறகும், நீதிமன்றம் பில்கிஸ்பானு வழக்கை ஏதோ தனித்ததொரு சம்பவமாகப் பிரித்து பார்த்திருப்பதே நாணயக்கேடானது. மேலும், இந்து மதவெறியர்கள் ஒவ்வொரு கலவரத்திலும், "கும்மலாகச் சென்று முஸ்லீம்களைத் தாக்குவது; முஸ்லீம் பெண்ககைப் பாலியல் பலாத்காரப்படுத்துவது" என்பதை ஒரு உத்தியாகவே செயல்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், "இந்து மதவெறிக் கும்பல் எப்படிப்பட்ட குற்றச் செயல்களில் ஏடுபட்டாலும் அவர்களின் உயிரை நீதிமன்றம் பறித்து விடாது" என்று உத்தரவாதமளிப்பதாகவே, இத்தீர்ப்பு அமைந்துள்ளது.

குண்டு வைக்கும் முஸ்லீம் பயங்கரவாதிகளுக்கு சர்வ சாதாரணமாகத் தூக்கு தண்டனை அளிக்கும் இந்திய நீதித்துறை, கும்பல் வன்முறையில் ஈடுபடும் இந்து மதவெறி ப‌யங்கரவாதிகளுக்குத் தண்டனை அளிக்கும் போதோ, "நிதானமாக" நடந்து கொள்கிறது. இந்திய நீதிமன்றங்களிடம் கானப்படும் இந்தக் காவிப் பாசத்தை நிரூபிப்பதற்கு ஏராளமார தீர்ப்புகளை ஆதாரமாகக் காட்ட முடியும்.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு மருத்துவர்களும், ஐந்து போலீசு அதிகாரிகளும், "தங்களின் கடமையை முறையாகச் செய்யாமல், நடந்த குற்றத்தை மூடி மறைத்து, இந்து மதவெறி பயங்கரவாதிகளுக்கு உதவியிருக்கிறார்கள்" என நீதிமன்றமே ஒத்துக் கொண்ட பிறகும், "அவர்களுக்கு இச்சதிச் செயலில் பங்கில்லை" என்ற காரணத்தைக் "கண்டுபிடித்து" அவர்களை விடுதலை செய்திருக்கிறது. காவிமயமாகி வரும் இந்திய அதிகார வர்க்கத்திறிகு, இதைவிட இனிப்பான தீர்ப்பு வேறெதுவும் இருக்க முடியாது.

இவர்களின் விடுதலையை எதிர்த்து மோடி அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் எனக் கோரியிருக்கிறார் பில்கிஸ்பானு. இந்தக் கோரிக்கை மோடிக்கு மட்டுமல்ல, "மோடியை இந்து மதவெறியன் அல்ல" எனச் சப்பைக்கட்டு கட்டும் "சோ" போன்ற நயவஞ்சகப் பேர்வழிகளுக்கும் விடப்பட்டுள்ள சவால்.


நன்றி : புதிய‌ ஜ‌ன‌நாய‌க‌ம் பிப்ர‌வ‌ரி/2008

வீராங்கனை பில்கிஸ் பானு வழக்கு - அடையாளம் -2

தீர்ப்பு வெளிவந்த பிறகும், தான் தொடர்ந்து மிரட்டப்படுவதாகக் கூறியிருக்கும் பில்கிஸ்பானு, "இத்தீர்ப்பு முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்பு அரசுயலை முடிவுக்குக் கொண்டுவந்துவிடும் என நான் கருதவில்லை" எனப் பத்திரிகைகளுக்கு பேட்டியளித்துள்ளார். தீர்ப்பு வெளிவந்த நாளன்று, ரந்திக்புர் கிராமத்தைச் சேர்ந்த 60 முஸ்லீம் குடும்பங்கள் தங்களின் பாதுகாப்பு கருதி, கிராமத்தைவிட்டு வெளியேறிவிட்டனர்.

இந்து மதவெறியர்களைத் தெருவில் எதிர்த்து நின்று பொராடக் கூடிய வலிமை கொண்ட ஜனநாயக‌ இயக்கங்கள் இல்லையென்றால், நீதிமன்றத் தீர்ப்புகளால் முஸ்லீம்களைப் பாதுகாத்து விட முடியாது என்பதை அவைகள் உணர்ந்திருப்பதையே இவ்வெளியேற்றம் எடுத்துக் காட்டுகிறது. உண்மை இப்படியிருக்க, முதலாளித்துவப் பத்திரிக்கைகளோ, இத்தீர்ப்பைக் காட்டி, சட்டத்தின் மூலமே இந்து மதவெறியர்களைத் தண்டித்து விட முடியும்" என்ற மாயையைப் பரப்பி வருகின்றனர்.

குஜராத் படுகொலை தொடர்பான 1,600 வழக்குகள் கடந்த ஆறாண்டுகளாக விசாரணை நிலையிலேயே உள்ளன. பில்கிஸ்பானுவைப் போல, எத்தனை சாட்சிகளால், தலைமறைவாக வாழ்ந்து கொண்டு, இந்து மதவெறியர்களை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றுவிட முடியும்?

இரண்டாம் உலகப் போரில் யூதர்களுக்கு எதிராக நாஜிகள் நடத்திய இனப் படுகொலையை விசாரிக்க நூரம்பர்க் நீதிமன்றம் அமைக்கப்பட்டதைப்போல, குஜராத் படுகொலையை விசாரிக்கவும் சிறப்பு நீதிமன்றக்ஙள் அமைக்கப்பட வேண்டும்; இப்படுகொலையை நடத்திய சங்பரிவார அமைப்புகள் அனைத்தும் தடை செய்யப்படவேண்டும். இதன் மூலம் மட்டும்தான், பதிக்கப்பட்ட முஸ்லீம்கள் அனைவருக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்ய முடியும்.

ஆனால், இந்தியக் 'குடியரசோ' இதனைச் செய்ய மறுத்து வருகிறது. எனவே, பில்கிஸ்பானு போராடி பெற்ற இத்தீர்ப்பை, மதச்சார்பின்மைக்குக் கிடைத்த வெற்றியாக இந்திய ஆளும் கும்பல் கொண்டாடத் துடிப்பதை நாம் அனுமதிக்கக் கூடாது.
நன்றி : புதிய‌ ஜ‌ன‌நாய‌க‌ம் பிப்ர‌வ‌ரி/2008

February 06, 2008

இடஒதுக்கீடு கிடைத்தது எப்படி - ஆவணப்புத்தகம்

இடஒதுக்கீடு கிடைத்தது எப்படி - ஆவணப்புத்தகம்
தற்போது குவைத்தில் அறிமுகம். புதுப்பொலிவுடன்.
விலை 250 காசுகள் மட்டுமே.
தேவைக்கு
+965-7493869, 9147292, 9369743, 9487759, 9477981
அல்லது மின்னஞ்சல் - tmmkkwt@gmail.com