திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் தற்போது புதிய முறை ஜனவரி 1-ந்தேதி முதல் அமலாக்கப்பட்டு உள்ளது. இந்தியாவிலேயே முதன்முதலாக இந்த புதிய முறையை திருச்சி பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.பாலச்சந்திரன் அறிமுகப்படுத்தி உள்ளார். இந்த புதிய திட்டத்தின்படி பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும் போதே அவரது விண்ணப்பம், அவர் இணைத்து அனுப்பும் ஆவணங்கள் அனைத்தும் முழுமையாக சரிபார்க்கப்படும். கிளார்க் நிலையில் உள்ள ஊழியர்கள் சரிபார்த்த பின்னர் விண்ணப்பதாரர் பணம் கட்டவேண்டும். ஆனால் அவரிடம் உடனே அதற்கான ரசீது வழங்கப்படமாட்டாது. விண்ணப்பமும் அதனுடன் இணைக்கப்பட்ட ஆவணமும் ஸ்கேன் செய்யப்பட்டு அப்படியே அதற்காக நியமிக்கப்பட்டுள்ள 2 அதிகாரிகளின் பார்வைக்கு செல்லும். அவர்கள் விண்ணப்பதாரரை நேரடியாக அழைத்து அவரது முன்னிலையிலேயே விண்ணப்பத்தை சரிபார்ப்பார்கள்.
விண்ணப்பத்தில் உள்ள விவரங்கள் எல்லாம் சரியாக இருந்தால் அதிகாரி அந்த இடத்திலேயே பாஸ்போர்ட் வழங்குவதற்கான அனுமதியை வழங்குவதாக எழுதிவிடுவார். போலீஸ் விசாரணை அறிக்கை வந்ததும் அவருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுவிடும். எனவே அவர் மீண்டும் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு விசாரணைக்காக வரவேண்டியது இல்லை, பாஸ்போர்ட் தனக்கு வீடு தேடி வந்துவிடும் என்ற முழு திருப்தியுடன் திரும்பி செல்லலாம்.
அதே நேரத்தில் விண்ணப்ப படிவத்தில் ஏதாவது தவறு அல்லது எழுத்துப்பிழைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த இடத்திலேயே விண்ணப்பதாரர் முன்னிலையில் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். சரி செய்ய முடியாத தவறுகள் அல்லது ஆவணங்களில் ஏதாவது குறைபாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் நிலுவையில் வைத்து விசாரிக்கும் பிரிவிற்கு அந்த விண்ணப்பம் அனுப்பப்பட்டு விடும்.
இதற்காக திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் பிரிவு என்று ஒன்றும் தனியாக தொடங்கப்பட்டு உள்ளது. அந்த பிரிவில் உள்ள ஊழியர்கள் இதனை முழு அளவில் விசாரித்து நடவடிக்கை எடுப்பார்கள்.
இந்த திட்டம் குறித்து திருச்சி பாஸ்போர்ட் அதிகாரி பாலச்சந்திரன் கூறியதாவது:- இந்த புதிய திட்டத்தின்படி விண்ணப்பதாரர் விண்ணப்பத்தை தாக்கல் செய்துவிட்டு 45 நிமிடத்தில் வெளியே வந்து விடலாம். அதன்பின்னர் அவர் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு விசாரணைக்காக வரவேண்டியதே இல்லை. அவர் வெளியே செல்லும்போது உரிய அதிகாரி கையினால் பணம் கட்டியதற்கான ரசீதை வாங்கி கொண்டு நிம்மதியாக செல்லலாம். இதன்மூலம் விசாரணைக்காக பலமுறை அலைவது தவிர்க்கப்படும்.
No comments:
Post a Comment