கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் 153 பேர் குற்றவாளிகள் என தனிநீதிமன்றம் புதன்கிழமை அறிவித்தது. கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் அப்துல் நாசர் மதானி உள்பட 8 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. 5 பேர் மீதான குற்றச்சாட்டுகளை வரும் திங்கள்கிழமை (ஆக.6) அறிவிப்பதாக நீதிபதி கே.ருத்ராபதி தெரிவித்தார். கோவையில் 1998 பிப்.14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் மற்றும் கலவரங்களில் 58 பேர் இறந்தனர். 250 பேர் காயமடைந்தனர். ரூ.4.37 கோடி மதிப்புள்ள தனியார் மற்றும் பொதுச் சொத்துகள் நாசப்படுத்தப்பட்டன. இதுதொடர்பாக 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 167 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான முகமது தஸ்தகீர் இறந்துவிட்டார். மற்றவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தனிநீதிமன்ற நீதிபதி கூறியது:
முக்கியக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட அல்-உம்மா நிறுவனர் எஸ்.ஏபாஷா, செயலர் முகமது அன்சாரி மற்றும் தாஜுதீன், நவாப்கான், பாசித், ஒசீர், முகமது அலிகான் (எ) குட்டி, சித்திக் அலி, ஊம் பாபு, ஜாகீர் உசேன், சலாம், தடா அஸ்லம், ஆட்டோ சிராஜ் உள்ளிட்ட 153 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் முடிவு செய்கிறது. அப்துல் நாசர் மதானி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்றார் நீதிபதி.
நெவ்சாத், சர்தார், முகமது அஸ்ரப், சுபேர், ஆர்மி ராஜூ, அகோஜி (எ) சிவக்குமார், அப்துல் ஹமீது ஆகியோர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளும் உறுதி செய்யப்படவில்லை என்றார்.
குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 153 பேரில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக 69 பேர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளது. எஞ்சிய 84 பேருக்கு கூட்டுச் சதியில் தொடர்பில்லை. ஆனால், இவர்கள் மீது சுமத்தப்பட்ட பிற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு உள்ளன என்றும் நீதிபதி அறிவித்தார்.
காலை 10.30-க்கு தொடங்கி மாலை 4 மணி வரை ஒவ்வொருவராக அழைத்து குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்ட விவரங்களை நீதிபதி தெரிவித்தார். கூட்டுச் சதியில் தொடர்பு இல்லாதவர்கள் ஜாமீன் பெற மனு செய்யலாம். குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படாதவர்கள் ஜாமீனில் செல்லலாம். தண்டனை விவரங்கள் ஆக.6-ம் தேதி முதல் அரசு மற்றும் எதிர்த்தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களைத் தொடர்ந்து அறிவிக்கப்படும் என்றார் நீதிபதி ருத்ராபதி.
- நன்றி - தினமனி
No comments:
Post a Comment