திருச்சி மாநகர திராவிடர் கழகம் சார்பில் சேது சமுத்திர திட்ட விளக்க பொதுக்கூட்டம் நேற்று நடத்தப்பட்டது. சத்திரம் பஸ் நிலையம் ரகுநாத் ஒட்டல் அருகே நடந்த கூட்டத்துக்கு மாநகர தலைவர் சேகர் தலைமை தாங்கினார். செயலாளர் செந்தமிழ் இனியன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் பெரியார் செல்வன் சேதுசமுத்திர திட்டம், அதன்பயன்கள் குறித்து விளக்கி பேசிக் கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தின் ஒரு பகுதியில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் திடீரென "ராமர் வாழ்க'' "சேது சமுத்திர திட்டம் ஒழிக'' என கோஷம் எழுப்பினார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே திராவிட கழக நிர்வாகிகள் அந்த வாலிபரை அப்புறபடுத்தினர். இதனால் அந்த வாலிபருக்கும் நிர்வாகிகளுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
உடனே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து கோட்டை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இன்ஸ்பெக்டர் கண்ணன் இந்த சம்பவம் தொடர்பாக பிடிபட்ட வாலிபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வாலிபர் யார்ப எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது விசாரணைக்கு பின்னரே தெரியவரும்.