சேலம், மே 7: சேலத்தைச் சேர்ந்த ஆசிரியர் தம்பதியரின் மகன் சபீருல்லா (30) ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.
÷ஐஏஎஸ் தேர்வு (2009) முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன. இதில் நாடு முழுவதும் 875 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் தமிழகத்தில் இருந்து 127 பேர் தேர்வு பெற்றுள்ளனர். சேலம் அம்மாப்பேட்டை வித்யா நகரைச் சேர்ந்தவர் ஐ.கராமத்துல்லா (67). கன்னங்குறிச்சி உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி மெஹதாப் பேகம் (65). சேலம் சாரதா கல்லூரியில் வேதியியல் துறைத் தலைவராக பணியாற்றியவர்.
÷இவர்களுக்கு அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றும் இப்ராஹிம் (32), பெத்தநாயக்கன்பாளையத்தில் ஆசிரியையாகப் பணியாற்றும் ஆயிஷா (33), பெங்களூர் ஐ.பி.எம். நிறுவனத்தில் பணியாற்றும் முகமது ஒய்.சபீருல்லா (29) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர்.
÷சபீருல்லா சேலம் செயின்ட் ஜான்ஸ் பள்ளியில் 1998-ல் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் பி.இ. (எலெக்ட்ரிகல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ்) படித்துள்ளார். படிப்பை முடித்த பிறகு டாடா கன்சல்டன்ஸி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்.
÷ஆனால் அதை ராஜிநாமா செய்துவிட்டு எம்.பி.ஏ. படிப்பதற்காக கர்நாடகத்தின் மணிப்பால் பல்கலைக்கழகத்தில் சேர்ந்துள்ளார். எம்.பி.ஏ. முடித்த இவர் இப்போது பெங்களூருவில் ஐ.பி.எம். கணினி நிறுவனத்தில் நிதி ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார்.
÷வேலைக்குச் சென்று விட்டு வந்து பகுதி நேரமாகப் படித்து முதல் முயற்சியிலேயே ஐ.ஏ.எஸ். தேர்வில் நாட்டில் 55-வது இடம் பிடித்து சபீருல்லா வெற்றி பெற்றுள்ளார். சபீருல்லாவுக்கு ஆசியா யாஷ்மின் (25) என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. பி.இ., எம்.எஸ். படித்துள்ள இவர் தனியார் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார்.
÷இது குறித்து சபீருல்லாவின் தந்தை கராமத்துல்லா கூறும்போது, டாடா நிறுவனத்தில் நல்ல வேலையில் இருந்த சபீருல்லா மேலும் படிக்க வேண்டும் என்ற ஆவலில் ராஜிநாமா செய்துவிட்டு வந்துவிட்டார். பின்னர் எம்.பி.ஏ. படித்து ஐ.பி.எம். நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார்.
÷தினமும் வேலை விட்டு வந்ததும் அதிகாலை 2 மணி வரை கண்விழித்து படித்து வந்தார். இப்போது பெங்களூருவில் இருக்கும் அவர், ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவரது வெற்றிக்கு பெற்றோராகிய நாங்களும், அவரது மனைவியின் ஒத்துழைப்புமே காரணம் என்று தெரிவித்துள்ள அவர், மக்கள் சேவை புரிவதே இனி தலையாய கடமை என்றார் அவர்.
May 09, 2010
சபீருல்லா ஐஏஎஸ் தேர்வில் வெற்றி
Labels:
ஐஏஎஸ் தேர்வு வெற்றி சேலம் முடிவு
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
"மக்கள் சேவை புரிவதே இனி தலையாய கடமை என்றார் அவர்."
athuthaan ini payamaai irukkirathu....
Post a Comment