இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

February 24, 2009

அல்லாமா முஹம்மது இக்பால்

எழுங்கள்!
கிழக்கின் அடிவானில்
இருள் கப்பிக் கொண்டுள்ளது.
கனல் பறக்கும் நம் குரலால்
தூங்கும் சபையில் விளக்கேற்றுவோம்.
உன் முன்னே
அடர்ந்திருக்கும் இருளை அகற்று
கிழக்கிலிருந்து தோன்றும் சூரியனைப் போல் எழு!
நேற்றும் இன்றும் கதையாக கழிந்து விட்டன
நாளை உதயமாவதை எதிர்பார்த்திரு!!
போன்ற கனல் பறக்கும் கவிதை வரிகளுக்கு சொந்தக்காரர் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த உலகப் புகழ்ப்பெற்ற கவிஞர்களில் ஒருவர்.
இந்தியத் திருநாடு ஈன்றெடுத்த அந்த தவப் புதல்வர் கவிஞர் மட்டுமா? மிகசிறந்த தத்துவ ஞானி, அரசியல் மேதை, வழக்கறிஞர், சிந்தனையாளர் எனப் பல்வேறு தளங்களில் வலம் வந்த அந்த எழுத்துப் போராளி, தனது முதிர்ந்த சிந்தனையில் விளைந்த கருத்துக்களை கவிதை வடிவில் எழுதி அவற்றை மக்கள் மன்றத்தில் வைத்தார். வெள்ளை ஏகாதிபத்தியம் இந்திய நாட்டை அடிமைப்படுத்திய காலத்தில் தன் நாட்டையும், தான் பிறந்த மண்ணையும் நினைத்து ஆழ்ந்த கவலைக் கொண்டு, தனது கருத்துக்கள் மூலம் மக்கள் விழிப்புணர்வும், எழுச்சியும் பெறவேண்டும் என்பதற்காக ஏராளமான கனல் பறக்கும் வைர வரிகளை தனது அறிவாற்றலின் மூலம் செதுக்கி, அவை மக்களின் உதடுகளில் உச்சரிக்கப்பட வேண்டும் என்பதற்காக பாடலாக எழுதி வெளியிட்டு, இந்திய திருநாடு வெள்ளையரை எதிர்த்து விடுதலைப் பெற வேண்டும் என்ற சுதந்திர தாகத்தை மக்கள் மனதில் விதைத்த பெருமை அல்லாமா முஹம்மது இக்பால் அவர்களையே சாரும்.
விலை மதிக்க முடியாத படைப்புகளுக்கு சொந்தக்காரராக விளங்கிய அல்லாமா இக்பால் 1873 பிப்ரவரி 22 இல் பிறந்தார். பள்ளிப் பருவத்திலேயே எழுதுவதில் ஆர்வம் மிகுந்தவராக விளங்கியவர். ஒருநாள் பள்ளிக்கு தாமதமாக செல்ல ஆசிரியரோ அவரிடம் "நீ ஏன் தாமதமாக வந்தாய்? எனக் கேள்வி கேட்டார். அதற்கு இக்பால் அவர்களிடமிருந்து வந்த பதிலோ வித்தியாசமாக இருந்தது. ஆசிரியரையே வியப்பில் ஆழ்த்தி விட்ட அந்த பதில் என்ன தெரியுமா? "இக்பால் எப்போதுமே தாமதமாகத் தான் வரும்" என்று சொல்ல இந்த இளம் வயது மாணவரின் புத்தி கூர்மையை வியந்து பாராட்டி அவரை தட்டி கொடுத்து அனுபினாரம் ஆசிரியர்.
உண்மைதானே!
இக்பால்(புகழ்) என்பது உடனே கிடைக்கும் கடை சரக்க என்ன? அது மெதுவாகத்தானே வரும். என்ற சிந்திக்க தூண்டும் அவரதுக் கருத்துக்கள் படிப்போரை வியப்பில் ஆழ்த்தி விடும்.
மௌலான அபுல் அலா மௌதுதியின் சந்திப்பு அல்லாமா இக்பால் அவர்களின் சிந்தனையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் பின்னர் அவரது கவிதைப் பயணம் ஆன்மிக வெளிச்சம் மிகுந்த பாதையில் அமைந்தது. மாணவப் பருவத்திலேயே மிகவும் திறமையாகத் திகழ்ந்த இக்பால் அவர்கள், நாடு போற்றும் கவிஞராக இளம் வயதிலேயே உயர்ந்து விட்ட அவர், இங்கிலாந்தில் சட்டம் பயிலும் மாணவராக இருந்தபோதும் கூட தனது எழுத்துப் பணியினை தொடர்ந்து செய்த அவரது படைப்புகளில் இச்சையைத் தூண்டும் விதமான கீழ்த்தரமான கருத்துக்களை எந்த இடத்திலும் காண முடிவதில்லை.

புகழுக்கும், வார்த்தை ஜாலங்களுக்கும் ஆசைப்படாத அவர் தனது படைப்புகளில் எந்த இடத்திலும் விரசத்தை நுழைத்ததாகத் தெரியவில்லை. ஏழைகளை வதைப்போரை சாடுபவரகவும், இளைஞர்களின் எதிர்காலம் பற்றி அறிவுரைகள் வழங்குபவராகவும், தாய்மையை போற்றுபவராகவும் விளங்கிய அவர் ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தால் அடிமைப்பட்டு கிடக்கும் இந்தியா மீட்க்கப்பட வேண்டுமென ஆர்பரித்தார். நாட்டை மீட்க போர்க்களதிற்கு திரண்டு வாருங்கள் என மக்களுக்கு அழைப்பு விடுத்த இக்பால்.

அரபு தேசத்தைப் பற்றி குறிப்பிடும்போது "கிரேக்கர்களை பிரமிக்க வைத்த நாடு, உலகிற்கு அறிவையும், தொழிலையும் தந்த நாடு. இறைவனால் பொன்னாக்கப்பட்ட நாடு. மேலாடைகளை ரத்தினங்களால் நிரப்பிய நாடு. பாரசிக வானில் கவிஞர்களை பிரகாசிக்க செய்த வானத்தையுடைய நாடு. அதிபர் முஹம்மது நபி அவர்களுக்கு குளிர்ந்த தென்றலை அளித்த நாடு". என்றார்.

இக்பால் அவர்களால் எழுதப்பட்ட "ஸாரே ஜகான் சே அச்சா, ஹிந்துஸ்தான் ஹமாரா ஹமாரா" என்று தொடங்கும் பாடல் 1947 ஆகஸ்ட்டில் ஆங்கிலேயர் விரட்டியடிக்கப்பட்டு இந்தியாவின் நாடாளுமன்றத்தில் முதன்முதலாக ஒலித்தது. மறைந்த நேரு அவர்களால் அதிகம் கையாளப்பட்ட பாடலும் இதுவாகும்.
உலகத்தில் சிறந்தது
எங்கள் இந்த தேசம்.
இந்த பூந்தோட்டம்
எங்களுடையது......... என நீண்டு செல்கின்றன பாடல் வரிகள்.
ராணுவத்தின் முழக்கமாக விளங்கும் இந்தப் பாடலின் வரிகள், இந்தியாவின் சுதந்திர மற்றும் குடியரசு தினங்களில் மட்டும் மக்களின் காதுகளுக்கு எட்டும். அவை நாள்தொறும் நாட்டில் ஒலிக்கப்பட வேண்டும். நாட்டின் விடுதலைக்காக உயிர்நீத்த சமுதாயத்தின் வாரிசுகளின் மனதில் உண்மையான வரலாறு விதைக்கப்பட வேண்டும்.
நாளைய வரலாற்றை எழுதுவது
நாமாக இருக்க வேண்டும்.
நேற்றும் இன்றும்
கதையாக கழிந்துவிட்டன.
நாளை உதயமாவதை
எதிர்பார்த்திரு!
என்ற அல்லாமா இக்பால் அவர்களின் கவிதை வரிகள் உயிரோட்டம் பெற வேண்டும்.

வாஞ்சையுடன்....
ராஜகிரி கஸ்ஸாலி

No comments: