இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

March 22, 2008

22-03-2008 இன்று சர்வதேச தண்ணீர் தினம்!

"தண்ணீர் தினம்' இன்று சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு "தண்ணீரும் சுத்தமும்' என்ற தலைப்பில் கருத்துக்கள் வலியுறுத்தப்படுகின்றன.
உலகின் நான்கில் மூன்று பங்குப் பகுதியை தண்ணீர்தான் ஆக்கிரமித்திருக்கிறது. ஆனால், இதில் நல்ல தண்ணீர் 2.7 சதவீதம் மட்டுமே. நல்ல தண்ணீரில் 75 சதவீதம் துருவப்பகுதிகளில் பனிக்கட்டியாக உறைந்திருப்பதால் இதற்காக நாம் ஆறுகளையும் நிலத்தடி நீரையும் பெரிதும் நம்பியிருக்கிறோம். ஆற்றுத் தண்ணீர் மற்றும் நிலத்தடியில் உள்ள நீர் இரண்டுமே மாசுபட்டு வருகின்றன. நகரக் கழிவுகள் அனைத்தும் ஆறுகளில் விடப்படுவதால் அந்த கழிவுகளுடனே அடுத்த நகர்ப்பகுதியை ஆறு சென்று அடைகிறது. இறுதியில் கழிவுநீர் குட்டையாகவும், நோய்க்கிருமிகளின் புகலிடமாகவும் மாறும் ஆறுகள் அதிகரித்து வருகின்றன. தொழிற்சாலைகளாலும் அதிகப்படியான பயன்பாட்டினாலும் நிலத்தடி நீர்வளமும் மாசுபட்டு வருகிறது.
நீர்மாசுபாட்டினால் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. குழந்தைகள் மற்றும் முதியோர்களின் உயிருக்கு இது ஆபத்தாக முடிந்துவிடுகிறது. உலகம் முழுவதும் ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் வயிற்றுப்போக்குக்கு பலியாகின்றனர்.
குடிக்கும் நீர் சுத்தமாக இருக்க வேண்டும். கிருமிகளை அழிக்க, கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். உலகம் முழுவதும் நல்ல தண்ணீருக்கு பிரச்னைகள் இருக்கின்றன. நீர்வளமும் குறைந்து கொண்டு வருகிறது. ஆகவே, பிரச்னைகளை தீர்க்கும் முகமாக நாம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். உலகின் 620 கோடி மக்கள் தொகையில் நூறு கோடிப் பேருக்கு நல்ல தண்ணீர் இன்னுமும் கிடைக்கவில்லை. தண்ணீர் தொடர்பான நோய்களாலேயே ஒவ்வொரு 15 வினாடிக்கு ஒருமுறை ஒரு குழந்தை இறக்கிறது. ஆண்டுக்கு 18 லட்சம் பேர் வயிற்றுப்போக்கால் இறக்கின்றனர். 260 கோடி மக்கள் சுத்தமின்மையால் நோய்க்கு ஆளாகியுள்ளனர். மருத்துவமனையில் சேர்க்கப்படும் நோயாளிகளில் 50 சதவீதத்தினருக்கு தண்ணீர் தொடர்பான நோய்கள் இருக்கின்றன.
கழிப்பிடமாக மாறும் சாலையோரங்கள்! : பாதுகாப்பான குடிநீர், சுத்தம் மற்றும் சுகாதாரம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று திருச்சியில் "கிராமாலயா' எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் செயல்படுகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் இந்நிறுவனம் சுத்தம் மற்றும் சுகாதாரத்தை வலியுறுத்தி வருகிறது. திறந்தவெளி மற்றும் சாலை ஓரங்கள் நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் கழிப்பிடமாக மாறியுள்ளன.
இவை சுற்றுப்புறத் துõய்மையை பாதிப்பதோடு, நோய் பரப்பும் இடமாகவும் மாறுகின்றன. இதை ஒழிக்க "கிராமாலயா' சிறப்பான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. திருச்சிப் பகுதியில் 186 சேரிகளில் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக பொது சுகாதார கழிப்பிடங்களுக்கு இந்நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இதுபோன்ற திட்டங்கள் ஒவ்வொரு கிராமத்திலும் துவக்கப்பட வேண்டும்.

No comments: