இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

February 14, 2008

சிமி அமைப்புக்கு மீண்டும் தடை:

மத்திய அரசின் இரட்டை நிலைப்பாட்டுக்கு கண்டனம்
இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்புக்கு தடை நீட்டிக்கப்பட்டதற்கு அகில இந்திய முஸ்லிம் மஜ்லிஸ் முஷாவராத்தின் தலைவர் டாக்டர் ஜஃபருல் இஸ்லாம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரவையின் கூட்டம் இம்மாதம் 7ஆம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிமி உள்பட பல அமைப்புகளின் செயல் பாடுகளுக்கு தடை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப் பட்டது. இந்தத் தடை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசால் தடை செய்யப்பட்ட பல்வேறு அமைப்புகளுக்கு தடை நீட்டிக்கப்பட்ட போதும் சிமி அமைப்புக்கான தடை குறித்து மட்டுமே விமர் சனங்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2001 ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சி செய்த பாரதீய ஜனதா அரசு சிமி அமைப்பை தடை செய்தது. சிமி தடை செய்யப்பட்ட நேரத்தில் அதன் தலைவர் மற்றும் அதன் முக்கிய உறுப்பினர்கள் போதுமான ஆதாரம் ஏதும் இல்லாமையால் விடுவிக்கப் பட்டனர் என்றும் முஷாவராத்தின் தலைவர் ஜஃபருல் இஸ்லாம் குறிப்பிடுகிறார்.

சங்பரிவார் பிரிவினைவாத மதவாத அமைப்புகள் நாட்டு மக்களின் ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கின்றனர். குஜராத், ஒரிஸா மற்றும் மகாராஷ்ட்ராவில் வெறிச்செயலை விளைவித்து வரும் இத்தகைய அமைப்புகளின் மீது தடையோ நடவடிக்கையோ எடுக்கப்படுவதில்லை. இது மத்திய அரசின் இரட்டை நிலைப்பாட்டுக்கு சரியான சான்றாகும்.

பயங்கரவாதத்திற்கு எதிரான எந்த நடவடிக்கையும் யாரும் எதிர்க்க மாட்டார்கள். ஆனால் எந்த ஆதாரமும் இன்றி அப்பாவி இளைஞர்களை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துவதையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஜஃபருல் இஸ்லாம் தெரிவித்தார். சிமி அமைப்பு எந்தவித பயங்கரவாத செயல் களிலும் ஈடுபட்டதாக எந்த ஆதாரமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

சிமி என்று சுருக்கமாக அழைக்கப்படும் (Students Islamic Movements of India) இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பு 2001ல் பாஜக அரசால் தடை செய்யப்பட்டது. அதே பாஜக அரசு 2003 ஆம் ஆண்டு சிமி மீதான தடையை நீட்டித்தது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2004ல் ஆட்சியைப் பிடித்தது. 2005ஆம் ஆண்டு சிமிக்கு தடையை நீட்டித்தது. தற்போது 2008ஆம் ஆண்டு சிமி மீதான தடையை மீண்டும் நீட்டித்துள்ளது. இந்தத் தடை இரண்டாண்டுகள் நீடிக்குமாம். பாஜக இரண்டு தடவை சிமியை தடை செய்துள்ளது. காங்கிரஸ் அரசும் இரண்டு தடவை சிமியை தடை செய்துள்ளது.
ஆஹா என்ன ஒற்றுமை!

No comments: